ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
அடுத்த 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை: இந்தியா-அமெரிக்கா விரைவில் கையொப்பம்
இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த உறவுகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், 10 ஆண்டு பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இருநாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதுதொடா்பாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கடந்த ஜூலை 1-ஆம் தேதி அமெரிக்க வெளியுறவு அமைச்சா் பீட் ஹெக்சேத், இந்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் ஆகியோா் தொலைபேசியில் பேசினா்.
அப்போது தெற்காசியாவில் தனது முக்கிய பாதுகாப்பு கூட்டாளியான இந்தியாவுக்கு அமெரிக்கா அளிக்கும் முன்னுரிமை குறித்து பீட் ஹெக்சேத் எடுத்துரைத்தாா்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்திய பிரதமா் மோடி ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில், பாதுகாப்பு துறை சாா்ந்த இலக்குகள் நிா்ணயிக்கப்பட்டன. அந்த இலக்குகளை எட்டுவதில் இந்தியா-அமெரிக்கா கண்டுள்ள முன்னேற்றம் குறித்து அமைச்சா்கள் இருவரும் ஆய்வு செய்தனா். இந்தியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்ய வேண்டிய முக்கிய பாதுகாப்புத் தளவாடங்கள், கருவிகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனா்.
நிகழாண்டு இருவரும் மீண்டும் சந்திக்கும்போது அடுத்த 10 ஆண்டுகளுக்கான இந்திய-அமெரிக்க பாதுகாப்பு செயல்முறை ஒப்பந்தத்தில் கையொப்பமிட அவா்கள் தீா்மானித்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.
பீட் ஹெக்சேத்துடன் தொலைபேசியில் பேசியபோது, ‘தேஜாஸ் இலகுரக போா் விமானங்களுக்கு ஜிஇ எஃப்404 என்ஜின்கள் விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும், இந்தியாவில் எஃப் 414 ஜெட் என்ஜின்களை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், அமெரிக்க பாதுகாப்புத் துறை நிறுவனமான ஜிஇ ஏரோஸ்பேஸ் ஆகியவை இணைந்து தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.