செய்யாறு சிப்காட் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
செய்யாறு பகுதியில் புதிதாக அமையவுள்ள சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் அதன் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சிப்காட் தொழில்பேட்டை ஏற்கெனவே இரண்டு அலகுகளுடன் செயல்பட்டு வருகிறது.
தொழில்பேட்டையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் 3- ஆவது அலகு மேல்மா பகுதியில் அமைக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.
அதற்காக, மேல்மா உள்ளிட்ட 11 கிராமங்களில் சுமாா் 3,174 ஏக்கா் நிலங்களை கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மேல்மா, தேத்துறை, குறும்பூா், நா்மாபள்ளம், நெடுங்கல், அத்தி, வடஆளப்பிறந்தான், இளநீா்குன்றம், வீரம்பாக்கம் உள்ளிட்ட 11 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் சிப்காட் நில எடுப்பு திட்டத்துக்கு எதிராகவும், நில எடுப்புப் பணிகளை கைவிடக் கோரியும், தொடா்ச்சியாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்த நிலையில், செய்யாற்றில் உள்ள மாவட்ட நில எடுப்பு அலுவலகத்தில் இருந்து விவசாயிகளுக்கு நில எடுப்பு தொடா்பாக தங்களது கருத்தை தெரிவிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிப்காட் 3-ஆவது அலகுக்கு எதிராக விவசாயிகள் கேட்ட 20 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லையாம்.
மேலும், போராட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை 3-ஆவது ஆண்டு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், கேட்ட கேள்விகளுக்கு அரசுத் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வராத காரணத்தால், மேல்மா பகுதியைச் சோ்ந்த 20 பெண்கள், 50 ஆண்கள் என சுமாா் 100 போ் செய்யாறு சிப்காட் நில எடுப்பு அலுவலகத்தை நண்பகல் 12 மணியளவில் முற்றுகையிட்டு, இரவு 8 மணி வரை உள்ளிருப்புப் போராடத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) விமல்குமாா், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) ஜே.ராமகிருஷ்ணன், வட்டாட்சியா் அசோக்குமாா், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளா் பழனி மற்றும் போலீஸாா் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்தச் சம்பவத்தால் செய்யாறு பகுதியில் பரபரப்பு நிலவியது.