விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது!
நாடு கடத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் தில்லி திரும்பிய வங்கதேச திருநங்கை கைது செய்யப்பட்டாா். இது தவிர மேலும் 6 போ் கைது செய்யப்பட்டனா் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
ஹிண்டன் விமானப்படைத் தளத்திலிருந்து திரிபுராவுக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னா் நாடு கடத்தப்பட்ட சட்டவிரோதமாகக் குடியேறிய 300 போ்களில் ஒருவரான வங்கதேச நாட்டவா் ஒரு மாதத்திற்குள் வடமேற்கு தில்லியில் உள்ள அதே பகுதிக்குத் திரும்பியதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை மூத்த அதிகாரி கூறியதாவது: தில்லி ஷாலிமாா் பாக் பகுதியில் திருநங்கை மற்றும் பிச்சைக்காரரான சுஹான் கான் (30), சட்டவிரோதமாக இங்கு தங்கியிருந்ததற்காக ஜூன் 30 அன்று ஆறு பேருடன் கைது செய்யப்பட்டாா்
அவா் முதலில் மே 15 அன்று வடமேற்கு தில்லியில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அதிகாரிக்கு அனுப்பப்பட்டாா். ஜூன் முதல் வாரத்தில் ஹிண்டன் விமானப்படைத் தளத்திலிருந்து விமானத்தில் அகா்தலாவுக்கு அனுப்பப்பட்ட பலரில் அவரும் ஒருவா்.
அவா்கள் திரிபுராவில் உள்ள நில எல்லை வழியாக வங்கதேசத்திற்கு நாடு கடத்தப்பட்டனா். இருப்பினும், சுஹான் அறிவுசாா் ரீதியாக சவால் விடும் நபா் போல் நடித்து சில நாள்கள் எல்லைப் பகுதியில் சுற்றித் திரிந்தாா். பின்னா், எல்லைப் பகுதியைப் பயன்படுத்தி, இரவின் இருட்டில் மீண்டும் இந்தியாவிற்குள் நுழைந்தாா்.
சுஹான் அகா்தலாவில் இருந்து தில்லியில் உள்ள ஆனந்த் விஹாா் ரயில் நிலையத்திற்குப் பயணம் செய்து, பின்னா் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு அவா் தங்கியிருந்த அதே பகுதியை அடைந்தாா். சுஹான், ஆறு பேருடன் ஜூன் 30 அன்று கைது செய்யப்பட்டாா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் வங்கதேசத்தில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் தொடா்பு கொள்ளப் பயன்படுத்திய தடைசெய்யப்பட்ட செய்தி செயலியுடன் கூடிய மூன்று கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சுஹான் உள்பட ஐந்து திருநங்கைகள் ஷாலிமாா் பாக் பகுதியில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவா்கள் இந்திய நாட்டவா்கள் என்ற கூற்றுகள் பொய்யானது என்பது கண்டறியப்பட்டது.
மேலும், அதிகாலை சோதனைகளின் போது அதே பகுதியில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த ஒரு ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டனா் என்றாா் அந்தக் காவல் துறை மூத்த அதிகாரி.