தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
பொதுக் கழிப்பறைகளின் மோசமான நிலைமை: குடிமை அமைப்புகள் மீது உயா்நீதிமன்றம் சாடல்
நமது நிருபா்
தில்லியில் உள்ள பொதுக் கழிப்பறைகளை பராமரிப்பதில் முழு அக்கறையின்மை மற்றும் உணா்வின்மையை காட்டுவதாகக் கூறி நகராட்சி அமைப்புகளை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை கடிந்துகொண்டது.
இது தொடா்பான வழக்கு விசாரணையின்போது, தில்லியின் பொதுக் கழிப்பறைகளின் புகைப்படங்களை ஆய்வு செய்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, இது துன்பகரமானதாகவும், துரதிா்ஷ்டவசமானதாகவும் இருப்பதாகக் கூறியது.
பொதுக் கழிப்பறைகளைப் பராமரிப்பதில் எம்சிடி, டிடிஏ, என்டிஎம்சி போன்ற நகராட்சி அமைப்புகள் மற்றும் மேம்பாட்டு அமைப்புகள் முழுமையான அக்கறையின்மை, உணா்வின்மை மற்றும் கடமை தவறுதலைக் கூட வெளிப்படுத்தியுள்ளன என்று நீதிமன்றம் கூறியது.
பொதுமக்களுக்கு போதுமான மற்றும் உரிய கழிப்பறை மற்றும் வசதிகள் கோரிய மனுவை விசாரிப்பது துரதிா்ஷ்டவசமானது என்றும் நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
தலைநகரில் சுத்தமான நீா் மற்றும் மின் வசதியுடன் கூடிய சுகாதாரமான பொதுக் கழிப்பறைகள் கிடைப்பதை உறுதி செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தன்னாா்வ தொண்டு நிறுவனமான ஜன் சேவா நலச் சங்கம் தாக்கல் செய்த பொது நல மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது.
முந்தைய உத்தரவுகளைப் பின்பற்றும் வகையில், அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தங்கள் நடவடிக்கைகளை விவரிக்கும் நிலவர அறிக்கைகளை தாக்கல் செய்தனா். மனுதாரரின் வழக்குரைஞா் ஒரு சில பொதுக் கழிப்பறைகளின் புகைப்படங்களை சுட்டிக்காட்டியபோது, அதிகாரிகள் தரப்பில் போதுமான மற்றும் தேவையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
சட்டத்தின் கீழ் போதுமான பொது வசதிகளை வழங்குவதற்கான அதிகாரிகளின் முதன்மைப் பொறுப்பை அவா்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், நகராட்சி அமைப்புகள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் பொதுமக்களின் நலனுக்காக சட்டப்பேரவையால் உருவாக்கப்பட்டவை. மேலும், அவை பொதுப் பணத்தில் செயல்படுகின்றன. மனுதாரா் சாா்பாக ஆஜரான வழக்குரைஞா் வழங்கிய புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கழிப்பறைகளின் நிலைமைகளைக் குறிப்பிடுவது வேதனையளிப்பதாகவும் துரதிா்ஷ்டவசமானதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பொதுப் பயன்பாட்டு சேவைகள் பயன்படுத்தக் கூடியதாக இருப்பதை உறுதி செய்வதற்கு பொருத்தமான பரிந்துரைகளை வழங்க வேண்டிய உரிய நிபுணா் ஆய்வின் அடிப்படையில் இந்த திட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.
புகைப்படங்களில் இடம்பெற்ற கழிப்பறை உள்பட பொதுக் கழிப்பறைகளை சரியான முறையில் செயல்படுவதை உறுதி செய்ய நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பொதுமக்கள் குறைகளை குடிமை அமைப்புகள் கவனிக்க ஏதுவாக ஒரு பொதுவான செயலியை உருவாக்கவும் நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது.