`இறந்தவர் 5 நாட்களுக்குப் பின் வீடு திரும்பினார்' - யாரை தகனம் செய்தனர் குடும்பத்தினர்?
அகமதாபாத்தில் இறந்த நபர் ஒருவர், அவருடைய உடலை தகனம் செய்த 5 நாட்களுக்கு பிறகு உயிரோடு வீடு திரும்பியிருக்கிறார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள நரோடாவின் ஹன்ஸ்புரா பகுதியைச் சேர்ந்த பிரிஜேஸ் சுதர் என்ற 43 வயதான நபர், தன்னுடைய வீட்டிலிருந்து கடந்த அக்டோபர் 27ஆம் தேதி காணாமல் போனார். இவர் பங்குத் தரகராக( share broker) செயல்பட்டதில் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்திருக்கிறார். மேலும் கடனாளி ஒருவரால் கடுமையான துன்புறுத்தலுக்கும் ஆளாகியிருக்கிறார். இந்நிலையில் இவர் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரின் தாயார் அன்சுயா சுதர் நரோடாவில் உள்ள காவல் நிலையத்தில், காணாமல் போன தன் மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி நவம்பர் 6 ஆம் தேதி புகாரளித்தார்.
இதற்கிடையில் சபர்மதி நதியில் மிகவும் சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஒரு உடல் மிதந்துள்ளது, யார் என அடையாளம் காண்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லாத காரணத்தினால் அந்த உடல் பிணவறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து , சபர்மதி நதியில் அடையாளம் தெரியாத ஒரு உடல் காணப்படுவதாகவும், அது பிரிஜேசின் உடலாக இருக்கலாம் எனவும் அவருடைய குடும்பத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடையாளம் தெரியாத உடலை, பிரிஜேஸ் சுதரின் உடல்தான் என சபர்மதி நதிக்கரை காவல்நிலைய காவலர்கள் அடையாளம் கண்டு தெரிவித்திருக்கின்றனர் பிரிஜேசின் மைத்துனர் ( brother in law) மற்றும் பிற உறவினர்கள்.
இதனைத் தொடர்ந்து உடலானது பிரிஜேசின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு நவம்பர் 10 அன்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் நவம்பர் 14 அன்று விஜயாபூரில் உள்ள அவரின் சொந்த இடத்தில், அங்குள்ள வழக்கத்தின்படி பிரிஜேஸ் சுதரின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் அவரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் என 100 பேர் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில், அடுத்த நாள் நவம்பர் 15 அன்று பிரிஜேஸ் சுதர் அவருடைய விஜயாபூர் வீட்டிற்கு வந்திருக்கிறார். இதனைக் கண்டு அவரின் தாயார் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சி அதிர்ச்சியடைந்தனர்.
நரோடா காவல் நிலைய ஆய்வாளர் அபிஷேக் திவான் இதுகுறித்துக் கூறுகையில், "பிரிஜேஸ் சுதரின் தாயார், தன்னுடைய மகன் திரும்பி வந்துவிட்டதாக தெரிவித்ததாகவும் அதனைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டதாகவும்" கூறியுள்ளார். தற்போது பிரிஜேஸ் சுதரின் குடும்பத்தார் தகனம் செய்த உடல் யாருடையது என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது, ஆனால் இதற்கான பதிலை காவல் ஆய்வாளர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.