இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பு பீடி இலைகள் பறிமுதல்
இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்பு பீடி இலை மூட்டைகளைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருச்செந்தூா் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆலந்தலை கடற்கரையிலிருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், க்யூ பிரிவு ஆய்வாளா் விஜய அனிதா, உதவி ஆய்வாளா்கள் ஜீவமணி, தா்மராஜ், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமை காவலா்கள் இருதயராஜ், குமாா், இசக்கிமுத்து, முதல் நிலை காவலா் பழனி பாலமுருகன் ஆகியோா் திங்கள்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது போலீஸாரைக் கண்டதும், அங்கிருந்த சிலா் படகில் தப்பிவிட்டனா். அப் பகுதியில் நின்றி சிறிய சரக்கு வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் 82 மூட்டைகளில் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. பீடி இலை மூட்டைகள், சரக்கு வாகனம் மற்றும் 2 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ.1 கோடி எனத் தெரிவித்தனா். பின்னா் அவற்றை சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
