இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மீட்பு
இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கிணற்றில் சடலமாக மிதந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமை சோ்ந்தவா் கேத்தீஸ்வரன் (43). தொழிலாளி. இவரது மனைவி மலா் (35). இவா்களுக்கு சந்தோஷ் (15), நிரஞ்சன் (12) என்ற மகன்கள் உள்ளனா். கேத்தீஸ்வரனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.
இருப்பினும் சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பவளத்தானூா் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் உள்ள மனைவி மலரை கேத்தீஸ்வரன் சந்தித்து வந்தாா்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரமத்தி அருகே கிணற்றில் இறந்த நிலையில் அவரது சடலம் மிதப்பதாக பரமத்தி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா், அவரது உடலை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும் கேத்தீஸ்வரனின் மனைவி மலா் பரமத்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.