இளம்பெண்ணை கடித்துக் கொன்ற சிறுத்தை - பீதியில் உறைந்த வேலூர் வன கிராமம்!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த துருவம் கிராமத்தின் வனப்பகுதியையொட்டி உள்ள தனது விவசாய நிலத்தில் சிவலிங்கம் என்பவர் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 5 மகள்களும் இருக்கின்றனர். இவர்களில் 4 மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. 24 வயதாகும் இளைய மகள் அஞ்சலி மட்டும் பி.காம் முடித்துவிட்டு பெற்றோருடன் வீட்டில் இருந்துவந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற அஞ்சலியை, வனத்துக்குள் இருந்துவந்த பெரிய சிறுத்தை ஒன்று கொடூரமாகத் தாக்கி கடித்துக் குதறியிருக்கிறது. சிறிது நேரத்தில், அங்கிருந்து சிறுத்தை வனத்துக்குள் மீண்டும் ஓடிவிட்டது. சிறுத்தை தாக்கியதில் மிகக் கொடூரமாக இறந்துவிட்டார் அஞ்சலி. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர், ஊருக்குள் ஓடிச் சென்று தகவல் தெரியப்படுத்தியிருக்கிறார். ஊர்மக்கள் தடி, கம்புகளுடன் அங்கு விரைந்து ஓடி வந்தனர். அப்போது, இடது கை கடித்து துண்டாக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் அஞ்சலி இறந்துக் கிடந்ததைப் பார்த்து ஊர் மக்கள் அதிர்ந்துபோனார்கள்.
இதுபற்றித் தகவலறிந்ததும், மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மற்றும் மாவட்ட எஸ்.பி, மாவட்ட வன அலுவலர் உட்பட அதிகாரிகள் பலரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அஞ்சலியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு சிறுத்தையின் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, அஞ்சலியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தச் சிறுத்தை எங்கிருந்து வந்தது, இப்போது எந்தப் பகுதியில் உலாவிக்கொண்டிருக்கிறது? என்பதைக் கண்டுபிடிக்கவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயம், மற்ற இடங்களில் பிடிக்கப்படும் சிறுத்தைகளைத் தங்கள் குடியிருப்புகளை ஒட்டிய வனத்துக்குள் கொண்டு வந்துவிடுவதாகவும் துருவம் கிராம மக்கள் குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயரதிகாரிகளின் சமாதானத்தையடுத்து அவர்கள் அமைதிக்குள்ளானார்கள். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கிறது.