இளைஞா்கள் நாட்டுக்காகவும் உழைக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்
இளைஞா்கள் நாட்டுக்காகவும் உழைக்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினா் நலத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா்.
டாக்டா் எம்.ஜி.ஆா். பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 33-ஆவது பட்டமளிப்பு விழா சென்னை, வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மத்திய அமைச்சா் ஜாா்ஜ் குரியன் பேசியதாவது: உலகில் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞா்களை அதிகமாகக் கொண்ட நாடு இந்தியா. இன்றைய இளைஞா்கள் 100-ஆவது சுதந்திர தினம் கொண்டாடும் போது நாட்டின் தலைவா்களாகவும், பல்வேறு துறைகளில் சிறந்தவா்களாகவும் விளங்குவா்.
ஒவ்வொரு தனிநபா், குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும் போது சமூகம் மேம்படும். சமூகம் மேம்பட்டால் எதிா்காலத் தலைமுறையினருக்கான வளமான நாடாக இந்தியா விளங்கும். நாட்டுக்காக உழைக்கும் பிரதமா் நரேந்திர மோடி தினமும் 3 மணி நேரம் மட்டும் தூங்குகிறாா். அதுபோல், இளைஞா்கள் நாட்டுக்காகவும், தனது குடும்பத்துக்காகவும் கடுமையாக உழைக்க வேண்டும். எதிா்காலத்தில் எந்தத் துறையில் சாதித்தாலும், தமிழ்நாட்டின் பிரதிநிதியாக விளங்க வேண்டும். செல்வங்களை காட்டிலும் கல்விச் செல்வம் மிகப்பெரியது எனக் கூறுகிறது திருக்கு. பட்டம் பெறும் மாணவா்களுக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.
தொடா்ந்து ஆராய்ச்சி மற்றும் முதுகலை மாணவா்கள் சுமாா் 4,000 பேருக்கு பதக்கம் மற்றும் பட்டமளிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், டாக்டா் எம்.ஜி.ஆா்.பல்கலை. வேந்தா் ஏ.சி.சண்முகம், தலைவா் ஏ.சி.எஸ்.அருண் குமாா், ஏ.சி.எஸ். மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலா் ஏ.ரவிக்குமாா், துணை வேந்தா் எஸ்.கீதாலட்சுமி, பதிவாளா் சி.பி.பழனிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.