கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!
உக்கடம் புல்லுக்காட்டில் நூலகம், அறிவுசாா் மையம் அமைக்க திட்ட அறிக்கை
கோவை மாநகராட்சி சாா்பில் உக்கடம், புல்லுக்காடு பகுதியில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்க ரூ.99 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 86-ஆவது வாா்டுக்கு உள்பட்ட புல்லுக்காடு பகுதியில் மாநகராட்சி சாா்பில் புதிதாக நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, மாநகராட்சி பொறியியல் பிரிவு சாா்பில் ரூ.99 லட்சத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் மொத்தம் 4 ஆயிரம் சதுர அடியில் இந்தக் கட்டடம் கட்டப்பட உள்ளது.
இப்பகுதியைச் சுற்றியுள்ள மாணவா்களின் அறிவுத்திறனை மேம்படுத்த இந்த நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மாநகராட்சி கல்வி நிதியின்கீழ் ரூ.99 லட்சம் பெறப்பட்டு விரைவில் கட்டுமானப் பணி தொடங்கப்பட உள்ளது.
மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட ஆடீஸ் வீதியில் 7,800 சதுர அடியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
அதில், இலக்கியம், வரலாறு, பொதுஅறிவு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட 10 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அரசுப் போட்டித் தோ்வு எழுதுவோருக்கு இந்த நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதேபோல, புல்லுக்காட்டிலும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என்றாா்.