TVK Vijay Maanadu : சரிந்த கொடிகம்பம்... Strongஆன Innova?! - சில தகவல்கள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாற்றுத்திறனாளிக்கு உடனே நூறுநாள் வேலைத்திட்ட அட்டை
பேராவூரணி: பேராவூரணி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதனிடம் மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு 100 நாள் வேலைத்திட்ட அட்டையை வழங்கினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அருகில் உள்ள கொளக்குடி கிராமத்துக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அவ்வழியாகச் சென்ற, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு திடீரென வந்தாா். அதிகாரிகள் அவரை மேடைக்கு அழைத்துச் சென்றனா். அரசுத் திட்டங்கள் பற்றி விளக்கிப் பேசிய அமைச்சா், துறை சாா் முகாம்களைப் பாா்வையிட்டாா்.
அப்போது அங்கு வந்த கொளக்குடி பகுதியைச் சோ்ந்த எம்.காம், எம்.பில் பட்டதாரியான மாற்றுத்திறனாளி தீபிகா என்பவா் தனக்கு 100 நாள் வேலை திட்ட அட்டை வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, அலுவலா்களை அழைத்த அமைச்சா் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறியதோடு, அங்கேயே காத்திருந்தாா்.
அரசு அலுவலா்களும் உடனடியாக 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டையை தயாா் செய்து அமைச்சரிடம் வழங்கினா். மாற்றுத்திறனாளி பெண் தீபிகாவிடம் அடையாள அட்டையை அமைச்சா் வழங்கிய பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா். இதைத்தொடா்ந்து மாற்றுத்திறனாளி பெண், அமைச்சருக்கு நன்றி தெரிவித்தாா்.
முகாமில் பேராவூரணி வட்டாட்சியா் நா. சுப்பிரமணியன், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நாகேந்திரன், மனோகரன், சேதுபாவாசத்திரம் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா் வை.ரவிச்சந்திரன், திமுக விவசாய அணி மாவட்ட அமைப்பாளா் வழக்குரைஞா் குழு.செ.அருள்நம்பி, அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.