செய்திகள் :

"உசுரோட இருந்தப்போ ஒரு பட்டு சேல வாங்கிக்கொடுக்காம விட்டுட்டேனே"- ஒர் ஆணின் சேலை தினப் பகிர்வு

post image
இன்று உலக புடவைகள் தினமாம்... அம்மாவிடம் சொல்லும்போதே, `புடவையே இல்லை' என வழக்கமான புலம்பல்களை ஆரம்பித்தார். அலமாரியை திறந்தால் மஞ்சள், பச்சை, சிவப்பு, ஊதா என எல்லா வண்ணத்திலும் 20 புடவைகள் இருந்தது.

'இது வேண்டாத புடவை','எடுத்து ஒரு முறை கூட கட்டாதது இது', 'ஒரு வாட்டி மட்டும் கட்டுனது இது' என புடவைகளின் வரிசை நீண்டது. என் அம்மாவின் அலமாரியில் நூற்றுக்கணக்கான புடவைகள் இருந்தாலும் என் அப்பாவிற்கு பெட்டியில் இருக்கும் மங்கிப் போன அந்த ஆரெஞ்சு நிற புடவைதான் ஸ்பெஷல். ஏனெனில் அது அவரின் அம்மாவின் புடவை. அந்தப் புடவையை எடுக்கும் போதெல்லாம் அதை முகர்ந்து பார்ப்பார். நான் உலகத்தையே கேட்டாலும், 'வாங்கிருவோம்' என்று அசால்ட்டாக சொல்லும் அப்பா, அவரின் அம்மாவின் புடவையை இதுவரை இருமுறை கேட்டும் கொடுத்தது இல்லை. அப்படி அந்தப் புடவையில் என்னதான் இருக்கிறது என்ற கேள்விக்கு அப்பா பகிர்ந்த சில விஷயங்கள்...

புடவை

"பொம்பளப் புள்ளைய பொறுத்தவரை அம்மாவோட புடவைங்கிறது தனக்கான புடவை, அல்லது ஏதோ ஒன்றுக்கு பயன்படுத்துற ஒரு துணி... ஆனால் ஆம்பளப் பசங்களுக்கு அது அம்மாவோட வாசம்... அம்மாவின் உயிர்ப்பு. அம்மாவின் அரவணைப்பு. என்னோட மூணு வயசுல எங்க ஆத்தா என்னை அது முதுகுல சேலைய வெச்சு இறுக்கி கட்டிக்கிட்டு வேல செய்யும். ``சேலையில தொட்டிலு கட்டி ஆலமரத்துல தொங்குன பய, இப்போ முதுக்கு மாறிட்டியா?"னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. பொட்டல் காட்டுல, கொளுத்துற வெயில்ல தனியா நின்னு வேலை செய்யுறதே கஷ்டம். ஆனா, எங்க ஆத்தா என்னையும் சேர்த்து சொமக்கும். `உன்கிட்ட பேசிக்கிட்டு இருந்தா உடம்பு வலியே தெரியல சாமி'ன்னு எதாவது பேசிக்கிட்டே வேல செய்யும். வேல முடிஞ்சு என்னை அது முதுகுல இருந்து கீழ இறக்கிவிடும் போது அதோட இடுப்பு, தோள்பட்டயெல்லாம் காய்ச்சுப்போயி இருக்கும். முனியாண்டி கோவில்ல திருநீறு எடுத்து இடுப்புல,முதுகுல தேச்சுக்கிட்டே நடந்து போகும். நான் கையில சோளக்கருது எடுத்துக்கிட்டு, என் அம்மாவோட முந்தானைய பிடிச்சுக்கிட்டு நடந்து போவேன். ஒரு தரம் கூட நிமிர்ந்து ரோட்டை பார்த்து நடந்தது இல்ல. ஏன்னா அம்மா முந்தான நம்மள சரியான இடத்துக்குத்தான் கூட்டுக்கிக்கு போகுதும்னு ஒரு நம்பிக்க. அம்மாவுக்கு அப்புறம் அந்த நம்பிக்க யாரு மேலேயும் வரல. 

கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்ச வயசு அது. பசங்களோட கிட்டிப்புள்ளு விளையாடும் போது, அது பறந்து போயி பக்கத்து விட்டு கண்ணாடியை உடைச்சுப்புடுச்சு. வீட்டுகுள்ள இருந்து, ' எவம்ள அது' னு மாரியக்கா கொடுத்த குரலுக்கே நான் அரண்டு போயிட்டேன். பெருசா பிரச்னை வரப்போகுதுனு தெரிஞ்சு அம்மா சேலைக்கு பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டேன். மாரியக்கவோட பயங்கரமான முகத்தையும், உடல் மொழியையும் அம்மோவோட முந்தானைக்கும், இடுப்புக்கும் இடையே நின்னு பார்த்தேன். இப்படி பல சண்டை, பல பிரச்னைகளிலிருந்து அம்மோட சேலை என்னை காப்பாத்தியிருக்கு. சில நேரம் நான் வெட்கப்பட்டு ஒளிஞ்சதும் அம்மா சேலைக்கு பின்னாடிதான். 

அம்மா

நான் ஆறாவது படிச்சிட்டு இருந்தேன். ஊர்த்திருவிழா அது. எல்லாப் பிள்ளைகளும் பலூன் வாங்கிட்டாங்க. 'முள்ளு வெட்டி கிடைக்கிற காசுல பலூனும், துப்பாக்கியும் வாங்கித்தர்றேன்'னு அம்மா சொல்லுச்சு. நிறைய மரம் வெட்டுனா நிறையக்காசு கிடைக்கும்னு வேகமா வெட்டுனதுல அம்மாகிட்ட இருந்த அந்த காட்டன் சேலையும் கிழிஞ்சுருச்சு. ஒரு கட்டு முள்ளு வெட்டி, சும்மாடு சுத்தி, 3 கிலோ மீட்டர் நடந்து போயி ஒரு வீட்ல முள்ள போட்டுச்சு. காசு கிடைக்கப்போகுதுனு ஆசையா இருந்த நேரத்துல, 'நாளைக்கு காசு தர்றேன்'னு  அந்த முதலாளியம்மா சொல்லிட்டாங்க. அப்போ அம்மாவோட கஷ்டம் புரியல... இப்போவே பலூன் வேணும்னு அழுது,ராத்திரி கஞ்சி கூட குடிக்காம தூங்கிட்டேன். அர்த்தராத்திரி எந்திருச்சு பார்த்தா, என் புள்ளைக்கு ஒரு பலூன் கூட வாங்கித்தர முடியலனு அம்மா அழுதுட்டு இருந்துச்சு. நான் அழுதத விட அம்மா அழுதது அதிகம். மரம் வெட்டி காய்ச்சுப்போன அந்தக் கை என் கண்ணத்தை தடவிக் கொடுத்துச்சு. அந்தக் கண்ணீரின் ஈரம் இன்னும் என் மனசுக்குள்ள காயல. அத இப்போ நினைச்சா கூட அழுதுருவேன்.  

அடுத்த வருசமும் திருவிழா வந்துச்சு. நான் பலூன் கேக்கவே கூடாதுனு உறுதியா இருந்தேன். ஆனா, கடைக்கு கூடிக்கிட்டு போயி முந்தானையில இருந்த ஒரு ரூபாயை எடுத்து எங்க ஆத்தா எனக்கு பலூன் வாங்கிக் கொடுத்துச்சு. அப்போ மட்டும் இல்ல,ஆத்தா சாகுற வரைக்கும் எனக்காக பல தடவ தன்னோட முந்தானைக் காசை அவுத்துருக்கு. ஒருவாட்டி காலேஜ்ல ஃபீஸ் கட்டலனு பரிட்சை எழுதவிடல. நான் வெளிய நிக்கிறத ஆத்தாக்கிட்ட யாரோ சொல்லிட்டாங்க, கால்வலிக்க காலேஜ்க்கு ஓடிவந்துச்சு. முந்தானய கையில விரிச்சுப்பிடிச்சு எனக்காக காலேஜ்ல பிச்சகேக்காத குறையா கெஞ்சுச்சு. அது வாங்குன மடிப்பிச்சயிலதான் இப்போவர நாம சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். அம்மோவோட சேலைக்கு மட்டும்தான் தெரியும் அது வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்பட்டுச்சு, அழுதுச்சுனு.

புடவை

ஆத்தாவுக்கு பட்டுசேலை கட்டிக்கணும் ரொம்ப ஆசை. யாராவது பட்டுச் சேலை கட்டியிருந்தா அவங்களையே பார்த்துட்டு நிக்கும். 'ஒசத்தியான சேலை கட்டியிருக்காவ'னு சொல்லும். 'நான் வாங்கித்தர்றேன்னு சொல்லும் போதெல்லாம், 'உனக்கு எதுக்கு சாமி கஷ்டம். பட்டுச்சீல நல்லாத்தான் இருக்கு ஆனா, அத கட்டிக்கிட்டு வியர்க்க விறுவிறுக்க வேல செய்யமுடியாது'னு சமாளிக்கும். எனக்கு கல்யாணம் நடக்கும் போது மருமகளுக்கு பார்த்து பார்த்து பட்டுச்சேலை வாங்குச்சு. அந்த நேரத்துல,' நீயும் ஒரு பட்டுச்சேல வாங்கிக்கோ'னு சொல்லாம விட்டுட்டேன். அது சவத்துக்குத்தான் பட்டு சேலை வாங்கிப்போட்டேன். உசுரோட இருந்துருந்தா, 'என் புள்ள வாங்கிக்கடுத்துச்சு'னு ஊரு முழுக்க காட்டியிருக்கும். கடைசி வரைக்கும் நான் அதுக்கு ஒரு பட்டு சேலை வாங்கிக்கொடுக்காம விட்டுட்டேனேனு இப்போவரை குற்ற உணர்ச்சியா இருக்கு. 

ஆஸ்பத்திரியில நீ பொறந்தப்போ, அது சேலையில சுத்தி தான் உன்ன என்கிட்ட கொடுத்தாங்க. புள்ளைக்கு மேல் வழிக்காம இருக்கும்னு அதுக்கிட்ட இருந்த நாலு சேலயில ரெண்டு சேலைய புள்ளய படுக்க வெச்சுக்கோனு கொடுத்துச்சு. இப்படி என்னோட எல்லா சூழ்நிலையிலும் எங்க ஆத்தாவோட சேல ரொம்ப முக்கியம். இப்போ ஆத்தா உசுரோட இல்ல. ஆனா இந்த சேலையில் அது வியர்வையும், வாசமும் இன்னும் இருக்கு. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா என்கிட்ட கொல்லுவீங்க உங்களுக்காக நான் இருக்கேன். ஆனா எனக்கு ஒரு கஷ்டம்னா இந்த சேலையை எடுத்துத் தடவி பார்த்து அழுதா போதும் எல்லாம் சரியாப்போகும். பிரச்னைக்கு பயந்து ஒரு குழந்தையா இந்த சேலைக்கு பின்னாடி தான் இப்பவும் நான் முகத்த பொதச்சுக்குறேன். காசு கொடுத்து வாங்க முடியாத இந்த சேலை எனக்கு எப்போதும் ஸ்பெஷல்...இது எங்க அம்மாவோட நினைவு இல்ல...இது எங்க அம்மா..." என அப்பா சொல்லும் போது நானும் என் பாட்டியாக உணர்ந்து தடவிப்பார்த்தேன். ஸ்பரிசம் உண்மையில் ஆறுதலாகத்தான் இருந்தது...

புடவை

சேலை இன்றும் நம் வாழ்வில் ஒன்றாக கலந்து இருக்க நம் கலாச்சாரம் மட்டும் காரணம் இல்லை... அம்மா, அக்கா, தங்கை, காதலி, மனைவி என நமக்கு நெருக்கமான உறவுகள், உணர்வுகள் அந்த சேலையில் பொதிந்து நம்முடன் வாழ்வதால்தான். ஆயிரம் ஆடைகள் வந்தாலும் பெண்களும், ஆண்களும் சேலையை ரசிக்கத்தான் செய்கிறார்கள்...

சேலை உடையல்ல...உணர்வு!

உலகப் புகழ்பெற்ற மூக்குகள்.. வாசனை சொல்லும் நினைவுகள்..! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

என் வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் பாரதியின் பங்கு - நெகிழ்ச்சி பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

குடும்ப வன்முறை: பெண்களால் துன்புறுத்தப்படும் ஆண்கள் - `My Wife, My Abuser’ ஆவணப்படமும் ஆய்வுகளும்

‘My Wife, My Abuser’‘குடும்ப வன்முறை’ என்றவுடன் ஓர் உயரமான, கட்டுமஸ்தான ஆண், அவரின் பெண் துணையை துன்புறுத்துவதுதான் நம் கண் முன்னால் நிழலாடும். செய்திகளிலும் அதுவே சொல்லப்படும். சினிமாவிலும் அவையே காட... மேலும் பார்க்க

ஆபிஸ் அனுபவம் ஒவ்வொன்றும் ஒருவிதம் ! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

தலைமுறை தடுமாற்றம் - அனுபவப் பகிர்வு | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க