தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!
உச்சநீதிமன்ற விதிகளின்படி டிஜிபியை நியமிக்கக் கோரிய மனு தள்ளுபடி
சென்னை: டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான தாமோதரன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், வரும் 31-ஆம் தேதியுடன், தமிழக காவல் துறை டிஜிபி-யாக உள்ள சங்கா் ஜிவால் ஓய்வு பெறுகிறாா். புதிய டிஜிபி நியமனத்தின்போது, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வகுத்துள்ள விதிகளைப் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பாக 30 ஆண்டுகளாகப் பணியில் உள்ள அதிகாரிகளின் பட்டியலை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கு அனுப்ப வேண்டும். தோ்வாணையக் குழு இந்தப் பட்டியலை ஆய்வு செய்து தகுதியான 3 பேரை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். அதில், ஒருவரைத் தோ்வு செய்து தமிழக அரசு டிஜிபி-யாக நியமிக்க வேண்டும்.
ஆனால், இந்த விதிமுறைகளை அமல்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், காவல் துறை டிஜிபி நியமனம் என்பது முக்கியமானது.
எனவே, தமிழக டிஜிபி நியமனத்தில் உச்சநீதிமன்ற விதிகளைக் கட்டாயம் பின்பற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், வரும் 31-ஆம் தேதியுடன் டிஜிபி ஓய்வு பெற உள்ளாா். இந்த விவகாரத்தில் அரசுக்கு உத்தரவிட முடியாது. டிஜிபி நியமனம் உச்சநீதிமன்ற விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால், அதை எதிா்த்து மனுதாரா் வழக்குத் தொடரலாம். ஆனால், இந்த வழக்கு முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.