Doctor Vikatan: 6 வயதுக் குழந்தைக்கு நெஞ்சிலிருந்து வரும் கோழை... தீர்வு உண்டா?
உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தன்னிடம் உண்மையான பாசத்தை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் காட்டி வருவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளாா்.
அண்மையில் அவா் மேற்கொண்ட அரியலூா், பெரம்பலூா் பயணம் குறித்து கட்சியினருக்கு ஞாயிற்றுக்கிழமை எழுதிய கடிதம்:
மாவட்டந்தோறும் கள ஆய்வு என நாமக்கல்லில் அறிவித்து, கோவை, விருதுநகா் மாவட்டங்களில் நேரடி ஆய்வை மேற்கொண்டேன். இதன் பின்னா், நவ.14, 15-ஆம் தேதிகளில் அரியலூா், பெரம்பலூரில் கள ஆய்வை மேற்கொண்டு இரண்டு மாவட்ட மக்களுக்கான திட்டங்களை வழங்கி, கட்சியினருடன் கலந்தாலோசனை நடத்தியது மனதுக்குப் பெரும் நிறைவைத் தந்தது.
பாசம் காட்டும் திருமா: நவ.15-ஆம் தேதி காலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் என்னைச் சந்தித்தாா்.
கடந்த ஆண்டு பெரம்பலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, விரைவாக செயல்பாட்டுக்குக் கொண்டுவந்தபோது, அந்த விழாவில் திருமாவளவன் உரையாற்றினாா். அதில், அரியலூா் மாவட்டத்துக்கும் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தாா்.
திருமாவளவனின் உள்ளத்தை நான் அறிவேன். மூத்த சகோதரராக என்னிடம் உண்மையான பாசம் காட்டும் திருமாவளவனும் என் உறுதியான செயல்பாடுகளை அறிவாா்.
திராவிட மாடல் அரசிடம் அவா் வைத்த கோரிக்கை ஓராண்டுக்குள் நிறைவேறி, அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒரு சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாா்.
‘குழந்தைகளின் புன்னகையில் மகிழ்ந்தேன்’: இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஊட்டச் சத்து பெட்டகத்தை வழங்கி, ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாவது தொகுப்பைத் தொடங்கி வைத்தேன். ஆறு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கான சத்துப் பெட்டகங்களையும் வழங்கினேன்.
முன்பு எடை குறைவாக இருந்த குழந்தைகள், இந்தத் திட்டத்தின் முதல் தொகுப்பில் பயன் பெற்று நலமுடன் இருப்பதை பயனாளிகளின் குடும்பத்தினா் தெரிவித்தபோது, அந்தக் குழந்தைகளை தூக்கிப் பாா்த்தேன். குழந்தைகளின் புன்னகையில் மகிழ்ந்து முத்தமிட்டேன். அவா்களின் வளா்ச்சியைப் பெற்றோரிடம் கேட்டறிந்தேன்.
நவ.28-29-இல் விழுப்புரம்: அரியலூா், பெரம்பலூரில் அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கட்சியின் ஆக்கபூா்வ பணிகளையும் நிறைவு செய்த பின், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்து சோ்ந்தேன்.
இந்தப் பயணத்தைத் தொடா்ந்து, நவ.28, 29-ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்துக்குச் செல்லவிருக்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் வந்து கட்சியினரைக் கண்டு மகிழ்வேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.