உத்தரகண்ட் பனிச் சரிவு: மேலும் 14 பேர் மீட்பு! 8 பேரை தேடும் பணி தீவிரம்!
உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவில் 55 பேர் சிக்கிய நிலையில், 47 பேரை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரை 4 ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
உத்தரகண்டில் இந்திய-திபெத் எல்லையையொட்டி 3,200 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள கடைக்கோடி கிராமம் மனா. பத்ரிநாத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
மனா மற்றும் பத்ரிநாத் இடையே வெள்ளிக்கிழமை காலை 7.15 மணியளவில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்குள்ள பிஆா்ஓ முகாம் புதைந்தது. இந்த முகாமில் 8 கண்டெய்னா்கள் மற்றும் கூடாரத்தில் இருந்த 55 தொழிலாளா்களும் பனிச்சரிவில் சிக்கினா். இத்தொழிலாளா்கள் அனைவரும் திபெத் எல்லையை நோக்கிய ராணுவப் போக்குவரத்துக்காக சாலையில் பனியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தவா்களாவா்.
பனிச்சரிவைத் தொடா்ந்து, ராணுவம், இந்திய-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் பிற துறைகளின் தரப்பில் மீட்புப் பணி உடனடியாகத் தொடங்கப்பட்டது. உயரமான பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட பயிற்சி பெற்ற ராணுவத்தின் ‘ஐபெக்ஸ்’ படைப் பிரிவினா் களமிறக்கப்பட்டனா்.
இதையும் படிக்க: தமிழகத்துக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா மீண்டும் வருகை?
இந்த நிலையில், பனிச் சரிவில் சிக்கிய 55 பேரில் 47 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 33 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்று(மார்ச். 1) 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் எஞ்சியுள்ள 8 பேரை மீட்பதற்காக 4 ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சமோலி மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ”மனாவில் சிக்கிய 55 பேரில் 47 பேர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது ஜோஷிமத் மருத்துவமனைக்கு 7 பேரை அழைத்து வந்துள்ளோம். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, அவர்களின் உடல்நிலை சீராகவுள்ளது. அவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். பனிச் சரிவில் சிக்கிய மீதமுள்ளவர்களும் விரைவில் மீட்கப்படுவார்கள்.
நேற்று மீட்கப்பட்ட 33 பேரில் 3 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்ட நிலையில், படுகாயமடைந்த 3 பேர் மனா ராணுவ மருத்துவமனையில் இருந்து ஜோஷிமத்தியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.” என்றார்.