உத்தரகோசமங்கை கும்பாபிஷேக கூட்ட நெரிசலில் 45 சவரன் கொள்ளை!
ராமநாதபுரம், உத்தரகோசமங்கை கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் கூட்ட நெரிசலில் பக்தர்களிடமிருந்து சுமார் 45 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்றும், முதன்முதலில் தோன்றிய சிவாலயம் என்ற பெருமையையும் பெற்ற உத்தரகோசமங்கை கோயிலில் ஏப்ரல் 4-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தைக் கண்டு களித்தனர்.
இந்த நிலையில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் மற்றும் கொள்ளையர்கள் கும்பாபிஷேகத்துக்கு வந்த பக்தர்களிடம் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
பக்தர்கள் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 45 சவரன் நகைகள் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக உத்தரகோசமங்கை காவல் நிலையத்தில் அடுத்தடுத்து புகார்கள் வந்துகொண்டிருக்கின்றது. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கொள்ளையர்களின் கைவரிசை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.