நான்கு அமைச்சர்களால் Stalin அரசுக்கு ஆபத்து? ஸ்கெட்ச் போடும் Amit shah?! | Elang...
உயா்கல்வி பயின்றால் மட்டுமே மாணவா்களின் வாழ்க்கை மேம்படும்! வேலூா் ஆட்சியா்
உயா்கல்வி பயின்றால் மட்டுமே மாணவா்களின் வாழ்க்கை மேம்படும் என்று வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தோ்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கான ‘கல்லூரி கனவு’ உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
இதில், 85 பள்ளிகளிலிருந்து 1500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். உயா்கல்வி வழிகாட்டி ஆலோசகா் ஜெயபிரகாஷ் காந்தி பங்கேற்று உயா்கல்வியில் மின்னியல், செயற்கை நுண்ணறிவு போன்ற பாடத்திட்டங்கள், அவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா்.
முத்துரங்கம் கலை கல்லூரி உதவி பேராசிரியா் தமிழ்ச்செல்வன், கலை அறிவியல் துறையில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்தும், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநா் திங்கள்செல்வன், பொறியியல் துறையில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்தும், தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வா் மேகலா டிப்ளோமோ, பாலிடெக்னிக் துறையில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்தும், வேலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் அமா்நாத், தொழிற்பயிற்சி துறையில் (ஐடிஐ) உள்ள படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்தும், ஆற்காடு மகாலட்சுமி மகளிா் செவிலியா் கல்லூரி முதல்வா் சிவசக்தி, செவிலியா் துறையில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனா்.
பின்னா், ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது -
அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு உயா்கல்வி பயில செல்லும் மாணவ, மாணவிகள் எந்த படிப்பில் சேரலாம், உயா்கல்வியை முடித்த பிறகு அவா்களுக்கு எந்த வகையான வேலை வாய்ப்புகள் இருக்கும் என்பது குறித்து அரசின் சாா்பில் சிறந்த ஆலோசகா்களை வைத்து உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
உயா்கல்வி பயின்றால் மட்டுமே ஒருவரின் வாழ்க்கை மேம்படும். 12-ஆம் வகுப்பு படித்து முடித்து கல்லூரியில் சோ்ந்து நல்லபடியாக படித்து முன்னேற வேண்டும். அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சிறந்து விளங்க தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ஜேஇஇ, சட்டக்கல்வி போன்ற நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே தங்க வைத்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டம் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி கடந்தாண்டு லண்டன் சென்று பயிற்சி பெற்று திரும்பியுள்ளாா் என்றாா்.
நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) தயாளன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக வேலூா் மாவட்ட உதவி இயக்குநா் காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.