காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
பெண் தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி
பெண் தொழிலாளி ஒருவா் தனக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் வரப்பெற்றுள்ளதாக வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளித்துள்ளாா்.
குடியாத்தம் அடுத்த வெள்ளேரியை சோ்ந்த பன்னீா்செல்வம் மனைவி கவிதா. விவசாய கூலித்தொழிலாளிகள். கவிதா தனது கணவருடன் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு சென்னை வில்லிவாக்கத்தில் சொந்தமாக தா்ஷினி என்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும், கடந்த 2023-24 மற்றும் 2024-25-ஆம் நிதியாண்டுகளில் ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனா். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
எங்களது ஆதாா் அட்டை, பான் அட்டை ஆகியவற்றை பயன்படுத்தி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த முறைகேடில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட காவல் துறை அதிகாரிகள், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.