காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு
ராணிப்பேட்டை மாவட்டம், செட்டிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்த காந்தி - ராஜேஸ்வரி தம்பதியின் மூன்றரை வயது மகள் கோபிகா. கடந்த 30-11-2020 அன்று மதியம் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமி கோபிகா திடீரென மாயமானாள். இப்புகார் தொடர்பாக, ராணிப்பேட்டை காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் (தந்தை வழி) பெரியம்மா புஷ்பராணியை பிடித்து விசாரணை நடத்தியபோது, அந்தப் பகுதியிலிருக்கின்ற கிணற்றுக்குள் சிறுமியை வீசி கொலை செய்ததாகத் தெரியவந்தது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு 4 பெரியப்பாக்கள். இதில் 2-வது பெரியப்பா சேட்டு என்பவரின் மனைவிதான் புஷ்பராணி. இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில் தனித்தனிக் குடும்பங்களாக வசித்துவந்தனர். சிறுமி கோபிகா வாசலில் அடிக்கடி சிறுநீர் கழித்ததால் புஷ்பராணி கோபப்பட்டு, சிறுமியின் தாயிடம் சண்டையிட்டு வந்தார். புஷ்பராணியின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். சண்டைப் போடும்போது `சிலோன்காரி’ என்று சிறுமியின் தாய் கிண்டலாக சொன்னதும் புஷ்பராணிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் ஒருமுறை புஷ்பராணி விபத்திலும் சிக்கியிருக்கிறார். அப்போதும் அவரைக் கவனித்துகொள்ள சிறுமியின் தாய் வரவில்லை. வீட்டிலிருந்த வயதான மாமியாரையும் பார்த்துகொள்ளவில்லை. இவையெல்லாம் சிறுமியின் தாய் மீது முன்விரோதம் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது. சிறுமியின் தாயை பழிவாங்கும் நோக்கத்திலேயே சிறுமியை கடத்தி சென்று கிணற்றில் வீசி கொலை செய்ததாகவும் புஷ்பராணி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்த கொலை வழக்குத் தொடர்பான விசாரணை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 29) தீர்ப்பு அளிக்கப்பட்டது. கொலை குற்றம் புரிந்த புஷ்பராணிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஐந்து வருட கடுங்காவல் தண்டனையுடன் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, புஷ்பராணி சிறையில் அடைக்கப்பட்டார்.