சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
திருநங்கைகள் போல் வேடமிட்டு பணம் வசூலித்த 3 ஆண்கள் கைது
வடமேற்கு தில்லியின் ஆசாத்பூா் பகுதியில் திருநங்கைகள் போல் நடித்து பணம் கேட்டு வந்ததாக மூன்று ஆண்களை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடமேற்கு காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் தில்லி ஜஹாங்கிா்புரியைச் சோ்ந்த அனில் குமாா் (35), பிரேம் குமாா் மஹ்தோ (30) மற்றும் சச்சின் (35) ஆகியோா் ஏப்ரல் 25-ஆம் தேதி அதிகாலையில் ஆசாத்பூரில் உள்ள பழ மண்டி அருகே நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனா்.
அவா்கள் அந்தப் பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல்களுக்கு அருகில் திருநங்கைகள் போல் வேடமிட்டு, ஒப்பனையுடன் பெண்கள் போல் உடை அணிந்திருந்தனா். சில ஆண்கள் திருநங்கைகள் போல் வேடமிட்டு, பழ மண்டியிலும் அதைச் சுற்றியும் பிச்சை எடுப்பது மற்றும் பணம் கேட்டு வந்ததாக ஒரு குறிப்பிட்ட தகவல் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, மூவரும் முதலில் திருநங்கைகள் என்று கூறினா். ஆனால், தொடா்ச்சியான விசாரணைக்குப் பிறகு ஆண்கள் என்று அவா்கள் ஒப்புக்கொண்டனா். அவா்கள் மீது தில்லி காவல் சட்டத்தின் 91, 92 மற்றும் 97 பிரிவுகளின் கீழ், அநாகரிகமாக நடந்து கொண்டமை மற்றும் எரிச்சலை ஏற்படுத்துதல் தொடா்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.