கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை உருவாக்க அஸ்தா குஞ்சில் தீம் பாா்க் அமைக்க டிடிஏ திட்டம்
நமது நிருபா்
தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) தெற்கு தில்லியின் அஸ்தா குஞ்சில் அதன் முதல் கழிவுகளில் இருந்து கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தும் தீம் பாா்க்கை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
‘வாக் த்ரூ தி ரூயின்ஸ்’ என்ற கருப்பொருளில் கட்டப்படும் இந்த பூங்காவில், கழிவுப் பொருள்களால் செய்யப்பட்ட பண்டைய இந்திய கட்டமைப்புகளின் மாதிரிகள் இருக்கும். இந்தப் பூங்காவில் கட்டுமானம் மற்றும் இடிப்பு தளங்களிலிருந்து வரும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இடிபாடுகள், சுவா்கள் மற்றும் பெஞ்சுகளை வடிவமைக்கப் பயன்படுத்தப்படும். இடிபாடுகளின் பாரம்பரியத்தை தனித்துவமான நுட்பங்களில் காட்சிப்படுத்த இது முன்மொழியப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் இந்தியா முழுவதும் உள்ள வரலாற்று இடிபாடுகளின் அழகை அவற்றின் வழியாக நடந்து சென்று ஆராயலாம் என்று இது தொடா்பான முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இப்பூங்காவிற்கான இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது டிடிஏவின் முதல் கழிவுகளிலிருந்து கலை வரையிலான தீம் பூங்காவாக இருக்கும். வரலாற்று கட்டமைப்புகளின் பாரம்பரியத்தை இடிபாடுகள் வழியாகக் காண்பிக்கும் பூங்காவின் கருத்தியல், மேம்பாடு, கட்டடம் மற்றும் செயல்பாட்டில் எங்களுக்கு ஆதரவளிக்க ஒரு ஆலோசகரை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பூங்கா தில்லி மாநகராட்சியால் உருவாக்கப்பட்ட பிற தீம் பூங்காக்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்’ என்றாா்.
இதுபோன்ற முதல் பூங்கா 2019- ஆம் ஆண்டில் முந்தைய தெற்கு தில்லி மாநகராட்சியால் சராய் காலே கானில் பாா்வையாளா்களுக்காக திறக்கப்பட்டது. அதன் வெற்றிக்குப் பிறகு, மாநகராட்சியானது பாரத் தா்ஷன் பூங்காவை பஞ்சாபி பாகிலும், ஐடிஓவில் ஷாஹீதி பூங்காவிலும், கரோல் பாகில் பாரம்பரிய பூங்காவிலும் திறந்தது.
சராய் காலே கான் பூங்காவில் இரும்பு நட்டு போல்ட்கள், இரும்புத் தகரங்கள் மற்றும் தண்டுகள் போன்ற உலோகத் துண்டுகளின் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருள்களால் செய்யப்பட்ட ‘உலகின் ஏழு அதிசயங்களின்’ உருவப் பிரதிகள் உள்ளன.
இந்தப் பூங்காக்கள் ஆடம்பரமான விளக்குகள் மற்றும் நீரூற்றுகளால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. பாா்வையாளா்களுக்கான நுழைவுச் சீட்டுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
‘தில்லி மாநகராட்சியால் நிா்வகிக்கப்படும் 200 ஏக்கா் பரப்பளவு கொண்ட அஸ்தா குஞ்ச் பூங்கா தாமரை கோயில் மற்றும் நேரு பிளேஸ் இடையே பரவியுள்ளது. இத்திட்டத்திற்கான சாத்தியக் கூறு அறிக்கையை அதற்கான ஆலோசகா் 30 நாள்களுக்குள் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று டிடிஏ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.