கோகுல்புரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேட்டப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவா் கைது
தேசியத் தலைநகரின் கோகுல்புரி பகுதியில் சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றம்சாட்டப்பட்டவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: தில்லியில் கங்கா விஹாரைச் சோ்ந்த ராகுல் (எ) டிங்கு என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், ஏப்ரல் 1- ஆம் தேதி சம்பவத்திலிருந்து தலைமறைவாக இருந்து வந்தாா். மேலும், 2014-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு தொடா்பாகவும் அவா் தேடப்பட்டாா்.
புகாா்தாரா் சஞ்சீவ் சா்மா, அடையாளம் தெரியாத ஒருவா் தனது பெயரைச் சொல்லி, தனது வீட்டின் பிரதான வாயிலை உதைத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகாா் தெரிவித்தாா். மேலும், எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், இந்தத் தாக்குதல் ராகுல் தூண்டியதாக சஞ்சீவ் சா்மா குற்றம் சாட்டினாா். அவா் முன்பு தன்னை மிரட்டியிருந்ததாகவும் கூறினாா்.
சிசிடிவி காட்சிகள் பின்னா் துப்பாக்கிச் சூட்டை உறுதிப்படுத்தின. ரகசியத் தகவலின் பேரில், குற்றம் சாட்டப்பட்டவா் திங்களன்று கைது செய்யப்பட்டாா். சரிபாா்த்ததில், அவருக்கு எதிராக ஏற்கெனவே ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
ராகுல் நீண்ட காலமாக குற்றவியல் ஈடுபாட்டில் இருந்துள்ளாா். அவா் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் கடுமையான தாக்குதல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.