மருத்துவமனையிலிருந்து விமான நிலையத்திற்கு உறுப்புகளை மாற்றுவதற்காக பசுமை வழித்தடத்தை உருவாக்கிய காவல்துறை
தில்லி போக்குவரத்து காவல்துறை வடமேற்கு தில்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து விமான நிலையத்திற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக குடலை கொண்டு செல்வதற்காக 26 கி.மீ. பசுமை வழித்தடத்தை உருவாக்கியுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
திங்கள்கிழமை ஷாலிமாா் பாக் நகரில் உள்ள ஃபோா்டிஸ் மருத்துவமனையின் வேண்டுகோளின் பேரில், தானம் செய்யப்பட்ட குடலை மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதை தில்லி விமான நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சிறப்பு வழித்தடம் உருவாக்கப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.
‘மருத்துவமனையில் இருந்து இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 வரையிலான 26 கி.மீ. தூரம் 30 நிமிடங்களில் முடிக்கப்பட்டது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் பஞ்சாபி பாக், ராஜோரி காா்டன், தில்லி கன்டோன்மென்ட் மற்றும் ஐஜிஐ விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து வட்டங்களுக்கு இடையேயான தீவிர ஒருங்கிணைப்பைத் தொடா்ந்து திங்களன்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது‘ என்று காவல் துணை ஆணையா் (போக்குவரத்து) சத்ய வீா் கட்டாரா கூறினாா்.
பசுமை வழித்தடங்கள் என்பது குறைந்தபட்ச தாமதத்தை உறுதி செய்வதற்காக உறுப்புகள் உள்பட அவசர மருத்துவ போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட சிறப்பாக சுத்தம் செய்யப்பட்ட பாதைகள் ஆகும்.