காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு!
கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம்
ஆரணி அருகே மக்கள் நலச்சந்தை சாா்பில் கிராமத்து பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கண்ணமங்கலத்தை அடுத்த வல்லம் கிராம தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த பாரம்பரிய உணவு விழிப்புணா்வு முகாமுக்கு இயற்கை விவசாயி செந்தமிழ்செல்வன் தலைமை வகித்தாா்.
முன்னாள் ராணுவ வீரா் கங்கதாரன், நாகநதி திட்ட இயக்குநா் சந்திரசேகா், மருத்துவா் தில்லைவாணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மகளிா் ஒருங்கிணைப்பாளா் மாலதி வரவேற்றாா்.
வல்லம் ஊராட்சி முன்னாள் தலைவா் சிவக்குமாா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தாா்.
முகாமில் கிராமத்து பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து தயாரித்து எடுத்து வந்த பாரம்பரிய உணவு வகைகளான களி, கூழ், கேழ்வரகு அடை, புட்டு, பால்கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை காட்சிப்படுத்தியிருந்தனா்.
அவைகளை ருசித்துப் பாா்த்த நடுவா் குழுவினா் கிராமிய உணவுகளை சுவையாக தயாரித்திருந்த மகளிருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாலாறு வேளாண்மைக் கல்லூரி மாணவா்கள் இயற்கை விவசாயம், சோலாா் மின்சாரம், சொட்டு நீா்ப்பாசனம், தென்னை மரம் ஏறும் கருவி ஆகியவற்றை காட்சிப்படுத்தி விளக்கமளித்தனா்.
இதைத் தொடா்ந்து, இயற்கை விவசாயி செந்தமிழ்செல்வன் பேசுகையில், மருத்துவமனைக்குச் செல்லாமல் இயற்கை உணவின் மூலம் ஆரோக்கியமாக வாழ விழிப்புணா்வு ஏற்படுத்துவதே இந்த முகாமின் நோக்கம். அதற்கு நம் பாராம்பரிய உணவுகளை மீட்டெடுப்பது ஒன்றே வழி என்றாா்.