``உயிரோட வீட்டுக்கு போயிடுவியா..'' - நீதிபதிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் மிரட்டல்
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஆறு வருடமாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது.
இறுதிகட்ட விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் குமார், ``எனது தரப்பு நபர் 63 வயது ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். அவருக்கு வேலையில்லாத மூன்று மகன்கள்தான் இருக்கின்றனர். எனவே அவருக்குக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி ஷிவாங்கி மங்களா, ``குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 22 மாத சிறைத்தண்டனை விதித்து, காசோலை மோசடி வழக்கில் ரூ.6.65 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்" என உத்தரவிட்டார்.
அப்போது தண்டனை விதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர், ``நீயெல்லாம் ஒரு ஆளு... நீ எனக்கு ஒன்னுமே இல்லை... வெளியே வா, எப்படி உயிரோட வீட்டுக்குப் போறனு பாக்கலாம்... எனக்கா தண்டனை எழுதுற" என உச்சக்கட்ட ஆத்திரத்தில் கத்தி மிரட்டினார்.
அதைத் தொடர்ந்து நீதிபதி ஷிவாங்கி மங்கலா எழுதிய தீர்ப்பில், ``குற்றவாளியும், வழக்கறிஞரும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தினர், மேலும் அவர்கள் இருவரும் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கவும் துன்புறுத்தினர். தேசிய மகளிர் ஆணையத்தில் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்கறிஞர் அதுல் குமாருக்கு, அவரது நடத்தைக்கான விளக்கத்தை எழுத்துப்பூர்வமாக வழங்கவும், தவறான நடத்தைக்காக குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கவும் வேண்டும்" என உத்தரவிட்டார்.