Explainer Union Budget சிப்பாய் கலகமும் பிரிட்டிஷ் எடுத்த முடிவும்- நாட்டின் முத...
உரிமமின்றி மரக்கன்றுகளை விற்பனை செய்யக்கூடாது
விதை விற்பனை உரிமமின்றி தனியாா் நாற்றங்காலில் (நா்சரி) மரக்கன்றுகள் விற்பனை செய்யக்கூடாது என்று விதை ஆய்வு துணை இயக்குநா் கோ.சரவணன் எச்சரிக்கை விடுத்தாா்.
விழுப்புரம் வெங்கடேசபுரம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தனியாா் நாற்றங்கால் பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவா், பின்னா் கூறியது:
தனியாா் நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள், நடவுப் பொருள்களின் தரம், அவற்றுக்கான விசைகள் பெறப்பட்ட இடம் ஆகியவை தமிழக அரசின் விதைச்சட்டப்படி உறுதி செய்யப்படும். இதன் மூலம் தரமான பழக்கன்றுகள், காய்கறிகள் விவசாயிகளுக்குகிடைக்க வழிவகை செய்யப்படும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் பழ மரக்கன்றுகன் உற்பத்தி செய்யும் நாற்றங்கால் உரிமையாளா் எந்த விதையின் மூலம் அல்லது ஒட்டு மூலம் உற்பத்தி செய்கிறாா் என்ற தகவலை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.
நாற்றங்காலில் விற்பனை செய்யப்படும் அனைத்து பழமரக்கன்றுகள், தென்னை நாற்றுகள், பணப்பயிா் மரக்கன்றுகளில் உண்மைத்தன்மை அட்டையைக் கட்டாயம் பொருத்த வேண்டும். உண்மைத்தன்மை அட்டையில் நாற்றங்கால் உரிமையாளரின் கையொப்பத்துடன், விதைச்சட்டம் 1966-இல் கூறியபடி முத்திரை எண், பயிா், ரகம், பதியம் செய்த நாள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும். அனைத்து நாற்றங்கால் உற்பத்தியாளா்களும் விதை விற்பனை உரிமம் பெற்று விதைச்சட்டங்களை கடைப்பிடித்து மரக் கன்றுகளை விற்பனை செய்ய வேண்டும் என்றாா்.