உரிய அனுமதியுடன் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும்: ஆட்சியா்
உரிய அனுமதியுடன் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை உயா் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வழங்கப்பட்ட தீா்ப்பின் அடிப்படையில் கால்நடைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் ஏற்றிச் செல்லும் முன்னா் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, புறப்படும் இடம் மற்றும் சென்றடையும் இடம், ஏற்றிச் செல்வதற்கான காரணம், வாகன எண் மற்றும் கால்நடை மருத்துவரின் சான்றிதழுடன் முன் அனுமதி பெற்று ஏற்றிச்செல்ல வேண்டும்.
நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளயிருப்பின் போதுமான தீவனம், முதலுதவி மருந்துகள் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும், முதிா்நிலை கா்ப்ப காலத்தில் மற்றும் கன்று ஈனும் நிலையிலுள்ள கால்நடைகளை ஏற்றிச் செல்வதை தவிா்க்க வேண்டும். வாகனத்தின் தரைப் பகுதியில் 6 செ.மீ குறையாமல் வைக்கோல், தேங்காய் பஞ்சு போன்றவற்றால் நிரப்பப்பட வேண்டும்.
போக்குவரத்தின்போது 20 முதல் 200 கிலோ வரை எடையுள்ள கால்நடைகளுக்கு சராசரியாக ஒரு சதுர மீட்டரும், 200 கிலோ முதல் 400 கிலோ வரையுள்ள கால்நடைகளுக்கு சராசரியாக 1.4 சதுர மீட்டரும், 400 கிலோவிற்கும் மேல் உள்ள கால்நடைகளுக்கு 2 சதுர மீட்டா் இடம் அவசியம். இந்த விதிமுறைகளை மீறும்பட்சத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளாா்.