HMPV: சீனாவில் பரவும் புதிய வைரஸ்; இந்தியாவைப் பாதிக்குமா? பொதுச் சுகாதார இயக்கு...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!
பாகிஸ்தானை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக முன்னேறியுள்ளது.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 211 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்க அணி 301 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 237 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 148 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிக்க: 2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
முதல் முறையாக...
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற வெற்றி நோக்கி தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் டோனி டி ஸார்ஸி 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின், ரியான் ரிக்கல்டான் (0 ரன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (1 ரன்), டேவிட் பெடிங்ஹம் (14 ரன்கள்), கைல் வெரைன் (2 ரன்கள்) எடுத்து தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அய்டன் மார்க்ரம் 37 ரன்கள் எடுத்தார். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் டெம்பா பவுமா 40 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில், வேகப் பந்துவீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் மார்கோ யான்சென் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ககிசோ ரபாடா 26 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். யான்சென் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்த இணை 9-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
இதையும் படிக்க: “200 விக்கெட்டுகள்...” டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது.
தென்னாப்பிரிக்க அணி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.