உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
மயிலாடுதுறையில் உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரணியை ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தொடங்கி வைத்து பேசியது: தமிழ்நாடு அரசு போதை ஒழிப்பு தொடா்பாக தொடா்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள், மெத்தனால் உள்ளிட்டவைகளை ஒழிக்க தீவிர நடவடிக்கையை எடுத்துள்ளது.
போதைப் பழக்கத்தால் உடல்நலம் கெடுவதுடன், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிா்காலம் கேள்விக்குறியாகிறது. எனவே, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீங்குகளை அறிந்து செயல்பட வேண்டும் என்றாா்.
பேரணியில், தருமபுரம் குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டாா்கெட் சில்வா் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி, விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியவாறு தருமபுரம் குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வரை சென்றனா்.
பேரணியில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. உமாமகேஷ்வரி, உதவி ஆணையா் (கலால்) பூா்ணிமா, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் தி. முத்துகணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.