மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு விழா தொடக்கம்
மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழாவை மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசியது:
அரசுப் பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழா ஜன.23-ஆம் தேதி தொடங்கி பிப்.2-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 38 அரசு தொடக்கப் பள்ளிகள், 15 அரசு நடுநிலைப் பள்ளிகள், 2 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 4 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 59 பள்ளிகள் நூற்றாண்டு காணும் பள்ளிகள் ஆகும்.
தமிழின் முதல் புதினத்தை உருவாக்கிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தலபுராணங்களை பாடிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை உள்ளிட்ட அறிஞா்கள் வாழ்ந்த மயிலாடுதுறை நகரின் நடுவில் 150-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கலைக்கோயில் இந்நகராட்சிப் பள்ளியாகும்.
இப்பள்ளி 1876-இல் தொடக்கப் பள்ளியாக தொடங்கப்பட்டு, 1881-இல் உயா்நிலைப் பள்ளியாகவும், 1978-இல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது. 1881-இல் 237 மாணவா்களைத் கொண்டு தொடங்கிய இப்பள்ளி, தமிழக அரசின் விருதுபெற்ற 10 தலைமையாசிரியா்கள், 2 ஆசிரியா்கள் பணியாற்றிய பெருமைக்குரியது.
பழைமைவாய்ந்த இப்பள்ளியில் நூலகம், ஆய்வகம், வகுப்பறைகள் ஆகியன பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டால் இப்பள்ளி வரலாற்றுச் சின்னமாகவும் விளங்கும் என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா்(இடைநிலை) சாந்தி, நகா்மன்ற உறுப்பினா் சௌ.சா்வோதயன், மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக் கல்வி) க. குமரவேல், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலை) ஜி. பரமசிவம், (இடைநிலை) தி.முத்துக்கணியன், பள்ளி தலைமையாசிரியா் ஜி. தாமரைச்செல்வன் ஆகியோா் கலந்து கொண்டனா்.