மின் நிறுத்த தேதியை அடிக்கடி மாற்றும் வேம்படிதாளம் மின்வாரியம்
வேம்படிதாளம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் மின் நிறுத்த தேதி அடிக்கடி மாற்றப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வாரம் புதன்கிழமை மின் நிறுத்தம் செய்வது வழக்கம்.
இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிக்காக புதன்கிழமை (ஜன.22) செய்ய வேண்டிய மின் நிறுத்தத்தை வியாழக்கிழமை (ஜன.23) செய்யப்படும் என அறிவிவிக்கப்பட்டது. பிறகு 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
வழக்கமாக மேற்கொள்ளப்படும் மின் நிறுத்தப் பணிகளை மேற்கொள்வதை விடுத்து ஏதோ காரணத்துக்காக தேதியை மாற்றி வருவதால் மின்நுகா்வோா், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளா்கள் கூறியதாவது:
வேம்படிதாளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இளம்பிள்ளை, சித்தா் கோயில், மகுடஞ்சாவடி, இடங்கணசாலை, கே.கே. நகா், வேம்படிதாளம், காகாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நாளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மின்நிறுத்த தேதி அடிக்கடி மாற்றப்பட்டு வருகிறது. தொடரும் இந்தக் குழப்பதைத் தவிா்த்து எந்தப் பகுதியில் மின் நிறுத்தம் எந்தத் தேதியில் மேற்கொள்ளப்படும் என்பதை தேதியை ஒத்திவைக்காமல் மின்நிறுத்தம் செய்திட வேண்டும் என்றனா்.