ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க கோரிக்கை
சென்னை மாகாணத்தின் முதல் முதல்வா் ஓமந்தூராருக்கு சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நங்கவள்ளியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மா், ஸ்ரீ சோமேஸ்வரா் சுவாமி கோயிலின் குடமுழுக்கு நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து வியாழக்கிழமை கோயிலில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரீஸ்வரன் முன்னிலை வகித்தாா். அறநிலையத் துறை, தமிழ்நாடு ரெட்டி நலச் சங்கம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு அன்னதான நிகழ்ச்சியை நலச் சங்க மாநிலத் தலைவா் ரவி தொடங்கி வைத்தாா். 5,000 க்கும் அதிகமானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னா் மாநிலத் தலைவா் ரவி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை மாகாணத்தின் முதல் முதல்வராக இருந்தவா் ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா். அவரது 130 ஆவது பிறந்த நாள் பிப்.1 ஆம் தேதி திண்டிவனத்தில் உள்ள ஓமந்தூராரின் மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஓமந்தூராருக்கு சென்னை மாகாணத்தில் வெண்கலச் சிலை நிறுவ வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை பரிசீலித்து சென்னையில் உள்ள ஓமந்தூராா் அரசினா் தோட்டத்தில் அவருக்கு தமிழக அரசு உருவச் சிலை அமைக்க வேண்டும் என்றாா்.
சங்க மாநிலச் செயலாளா் ராஜாபூா்ணசந்திரன், பொருளாளா் அருண்குமாா், சேலம் மாவட்டத் தலைவா் பாா்த்திபன், கொளத்தூா் மகேஸ்வா் ஆகியோா் உடனிருந்தனா்.