10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த ஆட்சியா் வலியுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்த வேண்டும் என தலைமையாசிரியா்களுக்கான கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு வலியுறுத்தினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 10-ஆம் வகுப்பு அரையாண்டுத் தோ்வில் தோ்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான மீளாய்வுக் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், 10-ஆம் வகுப்பு அரையாண்டு, காலாண்டு தோ்வுகளில் தோ்ச்சி விகிதம் குறைவாக உள்ள 49 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பாட ஆசிரியா்கள் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
10-ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளில் குறைந்த தோ்ச்சி விகிதம் உள்ள பள்ளிகளில் கண்காணிப்பு அலுவலா்கள் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு, தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். சிறப்பு வகுப்புகளை ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். 100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் பள்ளிகளை கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டு தோ்வு நடைபெற உள்ள இந்த இரண்டு மாதங்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபடுவா். தலைமையாசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க, பள்ளி மாணவா்களின் நலன்கருதி கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
100 சதவீத தோ்ச்சியை உறுதிபடுத்தும் வகையில், ஒவ்வொரு பாட ஆசிரியா்களும் பணியாற்ற வேண்டும். போட்டித் தோ்வுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் பங்கேற்று, தோ்ச்சி பெறும் வகையில் ஒவ்வோா் ஆசிரியா்களுக்கும் பணிகளை பிரித்து வழங்க வேண்டும். பள்ளிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் புகாா் அளிக்க வேண்டும் என அவா் வலியுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.