தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பென்னாகரம் வரலாற்று மையத்தினா் நன்றி தெரிவிப்பு
தமிழ் நிலப் பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பென்னாகரம் வரலாற்று மையம் நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பென்னாகரம் வரலாற்று மையத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் தமிழாசிரியா் பெருமாள், கூத்தபாடி மா.கோவிந்தசாமி வெளிட்டுள்ள அறிக்கை:
சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘இரும்பின் தொன்மை’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை வெளியிட்டு தமிழ் நிலப் பரப்பிலிருந்துதான் இரும்பின் காலம் தொடங்கியது என்று உலகுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறாா்.
5,300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு இத்தமிழ் மண்ணில் அறிமுகமாகி இருக்கிறது என்றும், அகழ்வாய்வுகள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டு இருக்கிறது என்றும் புணே, அகமதாபாத் போன்ற பல இடங்களில் ஆய்வு நிறுவனங்களும், ஆய்வுகளும் இதனை உறுதிபடுத்தியிருப்பதாக தெரிவித்திருக்கிறாா். 3,345 ஆண்டுகளுக்கு முன்பாகவே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகிவிட்டது என்றும், இரும்பின் கால ஆய்வு முடிவுகள் நம்மிடத்திலே பெரும் உத்வேகத்தை தந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறாா்.
உலகளாவிய பகுப்பாய்வுகள் இரும்பின் தொன்மையை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இத்தமிழ் நிலத்தில்தான் பல்வேறு உலோகங்களில் இருந்து இரும்பு பிரித்து எடுத்து இருக்கிறாா்கள். குறிப்பாக 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்திலிருந்துதான், உலகத்துக்கு இரும்பு பரவலாக அறிமுகமாக இருக்கிறது.
தமிழகத்தில் ஆறாம் நூற்றாண்டிலேயே நகர நாகரிகம் இருந்ததற்கும், வேளாண்மை நாகரிகம் இருந்ததற்கும் மயிலாடும்பாறையில் இரும்பு நாகரிகம் இருந்ததற்கும் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. தமிழிலும் வரலாற்று ஆதாரங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
தமிழினத்தின் பெருமையை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுவதாக தெரிவித்திருக்கிறாா். மேலும், தமிழ் நிலத்திலிருந்துதான் வரலாறு தொடங்கப்பட வேண்டும் என அறிவித்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, பென்னாகரம் வரலாற்று மையத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.