உ.பி.: மதமாற்றத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!
உ.பி.யில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஷ்ரவஸ்தி நகரிலுள்ள பக்வான்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரீஷ் சிங். கடந்த சில ஆண்டுகளாக பஞ்சாபில் வசித்த இவர் அவ்வப்போது தனது கிராமத்திற்கு வருவார்.
சமீபத்தில் அவர் உ.பி. கிராமத்திற்கு வந்தபோது ஒரு வீட்டில் கிறித்தவ மதக் கடவுளான இயேசுவின் பெயரில் நோய்களைச் குணப்படுத்தும் சடங்குகளைச் செய்யும் கூட்டம் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலும் வெளி கிராமத்தினர்.
இதுகுறித்த காணொளிகள் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரால் வெளியிடப்பட்டது. மேலும், அந்த நபர் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இதையும் படிக்க | ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உத்தரப் பிரதேசத்தின் சட்டவிரோத மதமாற்றத் தடைச்சட்டம் 2021-ன் கீழ் ஹரீஷ் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை எனக் குறிப்பிட்ட காவல்துறையினர், பஞ்சாப்புக்குத் தப்பித்துச் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளனர். அவரைத் தேடி காவல்துறை குழு அங்கு அனுப்பப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், அவர் இருந்த கிராமம் நேபாளத்தின் எல்லைக்கு அருகில் இருப்பதால் அவர் எல்லை வழியே தப்பித்துச் செல்லாமல் இருக்க அங்கும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.