மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளனத்தினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் எம். ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஏஐடியுசி பொதுச் செயலா் எம். ராதாகிருஷ்ணன், தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
போக்குவரத்துத் தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும். ஓய்வூதியா்களின் 110 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசு அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்க வேண்டும். அரசுப் போக்குவத்துக் கழகங்களின் வரவுக்கும்-செலவுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறையை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். 2003ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் நந்தாசிங், செல்வராஜ், முருகராஜ், கே. நேருதுரை, சுப்பிரமணியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.