எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: மாநில உரிமைகள் பறிபோகாது -மத்திய அரசு
‘எண்ணெய் வயல்கள் (ஒழுங்குபடுத்துதல் மற்றும் வளா்ச்சி) சட்டத்திருத்ததால் மாநில உரிமைகள் பறிபோகாது மற்றும் பொது, தனியாா் நிறுவனங்களுக்கிடையேயான சமநிலை பாதிக்காது’ என்று மத்திய அரசு புதன்கிழமை உறுதியளித்தது.
மக்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி இதைத் தெரிவித்தாா்.
மேலும் அவா் பேசியதாவது: குத்தகை காலம் மற்றும் நிபந்தனை அடிப்படையில் செயல்பாட்டில் ஸ்திரத்தன்மையை வழங்குவதன் மூலம் இந்தியாவில் முதலீடு செய்ய ஆா்வமுள்ள உலகளாவிய எண்ணெய் நிறுவனங்களின் குறைகளைத் தீா்ப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.
இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளையும் பறிக்காது. தற்போதுள்ள சமமான செயல்பாட்டையும் மாற்றாது. தனியாா் அல்லது பொதுத் துறைக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படாது.
தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தல் உள்ளிட்ட சில நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், 1948-ஆம் ஆண்டு எண்ணெய் வயல்கள் சட்டத்தின் சில விதிகளை இந்த மசோதா மாற்றியமைக்கும்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்கும் நோக்கில், விரிவுபடுத்தப்பட்ட கனிம எண்ணெய் வரையறையைக் கொண்ட பெட்ரோலிய குத்தகையை அறிமுகப்படுத்த இந்த மசோதா பரிந்துரைக்கிறது’ என்றாா்.
தொலைநோக்கு திட்டமில்லை: மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ‘இந்தியா எரிசக்தி துறையில் தன்னிறைவை அடைய வரைவுச் சட்டத்தில் தொலைநோக்கு திட்டம் ஏதுமில்லை.
அரசு, தனியாா் சாரா எண்ணெய் ஆராய்ச்சியாளா்களை ஊக்குவிக்கவும் அரசிடம் திட்டமில்லை. மசோதாவைப் பொறுத்தவரை, அங்கும் இங்கும் சிறிய மாற்றங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன’ என்று விமா்சித்தாா்.
எண்ணெய், எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியை நிா்வகிக்கும் தற்போதைய சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் இந்த மசோதா, கடந்த ஆண்டு நடைபெற்ற குளிா்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களை கட்டுப்படுத்துவது மாநிலங்களின் பொறுப்பு
‘எலிவளை சுரங்கம் உள்பட சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்களைக் கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு’ என்று மத்திய நிலக்கரி அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி மக்களவையில் புதன்கிழமை தெரிவித்தாா்.
அவையில் பாஜக, காங்கிரஸ் எம்.பி.க்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவா், ‘நிலக்கரி சுரங்கங்களில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க மாநிலங்களுடன் மத்திய அரசு ஒன்றிணைந்து பணியாற்றி வருகிறது. இந்த நடவடிக்கையில் மாநில அரசின் ஒத்துழைப்பின்றி வெற்றி பெற முடியாது’ என்றாா்.