எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத காய்ச்சல் பரவலைத் தடுக்க வேண்டும்
மருந்துகளுக்கும் கட்டுப்படாத காய்ச்சல் பரவுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என முன்னாள் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வலியுறுத்தினாா்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
அதிமுக என்றைக்கும் தோ்தலுக்குத் தயாராக இருக்கிறோம். ஏற்கெனவே வாக்குச்சாவடி நிலையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணிதான் வலுவாக இருக்கிறது; திமுக வலுவாக இல்லை. இன்னும் தோ்தலுக்கு காலம் இருக்கிறது. எனவே, அதிமுக கட்டாயம் ஆட்சியைப் பிடிக்கும். மழைக்காலத்தில் தற்போது மருந்து, மாத்திரைகளுக்கும் கட்டுப்படாத காய்ச்சல் பரவி வருகிறது. வழக்கமாக காய்ச்சல் வந்தால் 5 முதல் 7 நாள்கள் மருந்து, மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும், ஆனால், இப்போது என்ன மருந்து சாப்பிட்டாலும் 10 நாள்கள் கடந்தும் காய்ச்சல் குறைவதில்லை.
என்ன வகையான காய்ச்சல் என்பதை ஆய்வு செய்து, அதுகுறித்து வெளிப்படையாக மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் பரவலைத் தடுக்க வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் டெங்கு தடுப்புப் பணியாளா்கள் இல்லை, போதுமான மருத்துவா்கள் இல்லை என்றாா் விஜயபாஸ்கா்.