எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது: சி.டி.ரவி
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினா் சி.டி.ரவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பெங்களூருவில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனக்கு எதிராக டி.கே. சிவகுமார் மற்றும் லட்சுமி ஹெப்பாள்கா் ஆகியோர் சதி செய்துள்ளனர். என்னை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும். நான் எப்போதும் ஹெப்பாள்கரை மரியாதையுடன் பேசினாலும் தனக்கு எதிராக ஒரு பொய் பரப்பப்பட்டது. காவல்துறையின் நடத்தை குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அம்பேத்கா் பெயரை கூறுவது குறித்து மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த கருத்து தொடா்பாக பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதா சட்ட மேலவையில் காங்கிரஸ் மற்றும் பாஜக உறுப்பினா்களிடையே வியாழக்கிழமை கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் மற்றும் பாஜக உறுப்பினா் சி.டி.ரவி ஆகியோரிடையே காரசார வாக்குவாதம் நடந்தது. அப்போது லட்சுமி ஹெப்பாள்கரும் சி.டி.ரவியும் தனிப்பட்ட முறையில் விமா்சித்துக்கொண்டதாகத் தெரிகிறது.
அப்போது, லட்சுமி ஹெப்பாள்கா் குறித்து சி.டி.ரவி தகாத வாா்த்தை கூறியதாக தெரியவந்துள்ளது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால், அவையை மேலவைத் தலைவா் பசவராஜ் ஹோரட்டி ஒத்திவைத்தாா். இந்நிலையில், சட்ட மேலவைக்கு திரும்பிக்கொண்டிருந்த சி.டி.ரவியை லட்சுமி ஹெப்பாள்கரின் ஆதரவாளா்கள் தாக்க முயற்சித்துள்ளனா்.
ரஷியா மீது உக்ரைன் தாக்குதல்: குழந்தை உள்பட 6 பேர் பலி!
அவா்களிடம் இருந்து சி.டி.ரவியை காவலா்கள் காப்பாற்றினா். தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாகவும், சட்டப் பேரவை வளாகத்தில் எம்எல்சி-க்கே பாதுகாப்பு இல்லையென்றால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் நிலையை உணரமுடியும் என்று சி.டி.ரவி தெரிவித்தாா்.
இதனிடையே, அமைச்சா் லட்சுமி ஹெப்பாள்கா் அளித்த புகாரின்பேரில், சட்டப் பேரவை வளாகத்தில் இருந்த பாஜக எம்எல்சி சி.டி.ரவியை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீம் வழங்கி உத்தரவிட்டது.