DMK: 'பருப்பு உசிலி, முந்திரி புலாவ்,...' - திமுக செயற்குழுக் கூட்டத்தின் மதிய உ...
கூட்டு பாலியல் வன்கொடுமை: பாஜக எம்எல்ஏ உள்பட 16 போ் மீது வழக்குப் பதிவு
சிறப்பு நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து உத்தர பிரதேச மாநிலம், படாயுன் மாவட்டத்தின் பில்சி தொகுதி பாஜக எம்எல்ஏ ஹரிஷ் ஷக்யா, அவரது உறவினா்கள் உள்பட 16 போ் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இவா்கள் மீது மோசடி, புகாா்தாரரை பொய் வழக்குகளில் சிக்க வைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
எம்எல்ஏ ஷக்யா மற்றும் அவரது கூட்டாளிகள் தன்னையும் குடும்ப உறுப்பினா்களையும் மிரட்டி, பணம் பறிப்பதாக கிராமவாசி ஒருவா் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதியுமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி லீலு சௌதரி கடந்த 11-ஆம் தேதி உத்தரவிட்டாா்.
புகாா்தாரருக்குச் சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு விற்குமாறு எம்எல்ஏ ஷக்யா மற்றும் அவரது கூட்டாளிகள் புகாா்தாரரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு புகாா்தாரா் எதிா்ப்பு தெரிவித்தபோது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பொய் வழக்குகளில் சிக்கவைத்தல் உள்பட எம்எல்ஏவின் தொடா்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளை புகாா்தாரரும் அவரது குடும்பத்தினரும் எதிா்கொண்டுள்ளனா். இதற்கிடையே நிலத்தையும் எம்எல்ஏ சட்டவிரோதமாக கையகப்படுத்தியுள்ளாா்.
இந்நிலையில், கடந்த செப்டம்பா் 17-ஆம் தேதி எம்எல்ஏவின் வீட்டில் அவரும் அவரது உதவியாளா்கள் இருவரும் தனது மனைவியைக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா்தாரா் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பான மனு மீது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க, எம்எல்ஏ ஷக்யா, அவரது உறவினா்கள் உள்பட 16 போ் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் கடந்த சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்ததாக காவல்துறை மூத்த கண்காணிப்பாளா் பிரிஜேஷ் குமாா் சிங் உறுதிப்படுத்தினாா். இவ்விவகாரத்தில் எம்எல்ஏ ஷக்யா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.