`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
`என்னை டார்கெட் பண்ணுங்க, ஆனா அந்த 23 வயது குழந்தையை விட்ருங்க’- ஹர்ஷித் ராணாவுக்காக கொதித்த கம்பீர்
ஹர்ஷித் ராணா இந்திய அணிக்குள் நுழைந்த நாள் முதலே, `எதனடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டார்?' என்ற கேள்வி இன்று வரை விடை இல்லாமல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இதில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் தலையீட்டால்தான் ஹர்ஷித் ராணா இந்திய அணிக்குள் இருக்கிறார் என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
இந்த விமர்சனத்துக்காக முன்வைக்கப்படும் காரணங்களும் மறுக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான புள்ளி விவரங்களாக இருக்கின்றன. அவை என்னென்ன, ஹர்ஷித் ராணா தேர்வு ஏன் இப்படி விவாதப்பொருளானது ஏன் என விரிவாகப் பார்க்கலாம்.

இந்திய அணிக்குள் ஹர்ஷித் ராணா வந்தது எப்படி?
முதலில், 2024 ஐ.பி.எல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியில் வேகப்பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக ஹர்ஷித் ராணாவின் பெயர் வெளிச்சத்துக்கு வந்தது.
அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட். கம்பீர் ஆலோசகராகத்தான் அணியில் இருந்தார். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு முக்கிய காரணமாக கம்பீர் கொண்டாடப்பட்டார்.
டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததும், இந்த வாதத்தையும் முன்வைத்தே தலைமைப் பயிற்சியாளர் இடத்துக்கு கம்பீர் கொண்டுவரப்பட்டார்.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு அந்த ஆண்டில், 2025-ம் ஆண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மெகா ஏலத்தில் அணியின் தக்கவைப்புப் பட்டியல் வெளியிடுவதற்கான கடைசி தேதி அக்டோபர் 31-க்கு முன்பு வரை 2 ஒயிட் பால் சீரிஸ், 2 ரெட் பால் சீரிஸில் இந்தியா ஆடியது.
அதில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்படவில்லை. அக்டோபர் 25-ம் தேதி பார்டர் கவாஸ்கர் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார்.

மறுமுனையில், ஐ.பி.எல் விதிமுறைப்படி சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரரை ரூ. 4 கோடிக்குதான் தக்கவைக்க முடியும் என்ற அடிப்படையில், ஹர்ஷித் ராணாவை ரூ. 4 கோடிக்கு தக்கவைத்தது கொல்கத்தா அணி.
அடுத்து, பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் போட்டியிலேயே ஹர்ஷித் ராணா பிளேயிங் லெவனில் களமிறக்கப்பட்டார்.
அப்போதே, கொல்கத்தா அணியில் ஹர்ஷித் ராணாவை ரூ. 4 கோடியில் தக்கவைப்பதற்காகவே அவரை இந்திய அணியில் கம்பீர் அவரை தேர்வு செய்யவில்லை, இப்போது சம்பந்தமே இல்லாமல் ஒயிட் பால் தொடரான ஐ.பி.எல்லில் சிறப்பாக பந்துவீசினார் என்று பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்திருக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டது.
அந்த பார்டர் கவாஸ்கர் தொடரிலும் 2 போட்டிகளில் பெரிதாக அவர் சோபிக்கவில்லை.
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அஸ்வின் விமர்சனம் என்ன?
அதன்பின்னர், சாம்பியன்ஸ் டிராபி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆசிய கோப்பை என இந்தியா ஆடிய முக்கிய தொடர்களில் ஹர்ஷித் ராணா இடம்பெற்றார். அடுத்ததாக, அக்டோபர் 19 முதல் தொடங்கும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியிலும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது 3 ஃபார்மெட்டுக்கான இந்திய அணியில் கேப்டன் கில்லுக்கு, பும்ராவுக்கு அடுத்து இடம்பெற்றிருக்கும் ஒரே வீரர் ஹர்ஷித் ராணாதான்.

இவ்வாறிருக்க, இந்திய அணியின் முன்னாள் வீரரும், 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ``தற்சமயத்தில் இந்திய அணியில் ஒரேயொரு நிரந்தர வீரர்தான் இருக்கிறார்.
அவர் எதற்கு இருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை. சிலர் நன்றாக ஆடினாலும் அணியில் இடமில்லை.
சிலர் நன்றாக ஆடவில்லையென்றாலும் அணியில் இடம். அணியில் தேர்வாக வேண்டுமென்றால் கம்பீருக்கு ஆமாம் சாமி போட வேண்டும் போல" என்று ஹர்ஷித் ராணா தேர்வை விமர்சித்திருந்தார்.

அதேபோல் முன்னாள் வீரர் அஸ்வின், ``அணியில் அவரைச் சேர்ப்பதற்கான காரணத்தை தெரிந்துகொள்வதற்காகவே தேர்வுக்குழு கூட்டத்தில் நான் இருக்க விரும்புகிறேன்" என்று ஹர்ஷித் ராணா குறித்து பேசியிருந்தார்.
இவர்கள் மட்டுமல்லாது, பல தரப்பினரும் ஹர்ஷித் ராணா தேர்வை விமர்சித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஹர்ஷித் ராணா மீதான விமர்சனங்களுக்கு ஸ்ரீகாந்த், அஸ்வின் உள்ளிட்டோரை கம்பீர் மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.
அரணாக வந்த கம்பீர்!
வெஸ்ட் இண்டீசுக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியையும் வென்ற பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கம்பீர், ``தங்களின் யூடியூப் சேனலை ஓடவைப்பதற்காக 23 வயது வீரரை பெர்சனலாக டார்கெட் செய்வது வெட்கக்கேடு.
உங்களுக்கு என்னை டார்கெட் செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள். என்னால் அதை எதிர்கொள்ள முடியும்.
ஆனால், அந்த 23 வயது குழந்தையை விட்டுவிடுங்கள். யூடியூப் சேனலுக்காக எதையாவது பேசாதீர்கள்.
அவரின் அப்பா ஒன்றும் தேர்வுக்குழு நபர் அல்ல. தனது சொந்த தகுதியால் அவர் கிரிக்கெட் விளையாடுகிறார்.
ஹர்ஷித் ராணாவை சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்வது சரியல்ல. இவரைப்போன்ற இளம் வீரர்களை டார்கெட் செய்யாதீர்கள்" வெளிப்படையாகப் பேசினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ஹர்ஷித் ராணாவின் பவுலிங்!
ஹர்ஷித் ராணா இந்திய அணியில் இதுவரை ஆடிய 2 டெஸ்ட் போட்டிகளில் 50.7 ஆவரேஜில் 2 விக்கெட்டுகளையும், 5 ஒருநாள் போட்டிகளில் 20 ஆவரேஜில் 10 விக்கெட்டுகளும், 3 டி20 போட்டிகளில் 22 ஆவரேஜில் 4 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் போட்டிகளில் எத்தனையோ வீரர்கள் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வாய்ப்புக்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஐ.பி.எல்லில் ஒரேயொரு சீசனில் சிறப்பாக ஆடினார் என்று ஆல் ஃபார்மட் இந்திய அணியிலும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளித்துக்கொண்டிருப்பதாக வரும் விமர்சனம் குறித்து உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.