`எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெண்களின் ஆதரவைப் பெற்ற ஒரே தலைவர் ஸ்டாலின்தான்!’ – அமைச்சர் சி.வெ.கணேசன்
கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டக் கழக செயற்குழு ஆலோசனைக் கூட்டம், தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன், ``இந்தியாவில் இருக்கும் மாநிலங்கள் மட்டுமல்ல, கடல் கடந்து அயல்நாடுகள்கூட செயல்படுத்த நினைக்கும் அளவுக்கு நம் முதல்வர் திட்டங்களை வகுத்திருக்கிறார். அப்படி என்ன திட்டம் ? அது காலை உணவுத் திட்டம். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. `இப்படி ஒரு சிறப்பான திட்டத்தினை தமிழ்நாட்டின் முதலமைச்சர் கொண்டு வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை’ என்று வியந்து கூறியிருக்கிறார் கனடா நாட்டின் பிரதமர். அதுமட்டுமல்ல இந்த திட்டத்தினை விரைவில் அந்த நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.
அப்படி ஒரு சிறப்பான திட்டத்தை நம் முதல்வர் கொண்டு வந்திருக்கிறார். அதேபோல மகளிர் உரிமைத் திட்டம். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் அதைப் பார்த்துதான் தங்களின் தேர்தல் அறிக்கையை தயார் செய்கின்றனர். இப்படி முதல்வரின் அனைத்து திட்டங்களும் சிறப்பானதுதான். பொதுவாக தேர்தல்களில் வாக்குகள் கேட்கப் போகும்போது ஊராகட்டும், காலனியாகட்டும் என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்பார்கள். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாம் வாக்கு கேட்கச் சென்ற இடங்களில் அப்படியான கேள்விகள் எழுந்ததா? கண்டிப்பாக இல்லை. எங்கள் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருக்கும் அனைத்து வார்டுகளுக்கும் நான் சென்றேன். ஒரு ஊரில்கூட மக்கள் மறித்து எதையும் கேட்கவில்லை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு பெண்களின் ஆதரவை அதிக அளவில் பெற்ற ஒரே தலைவர் நம்முடைய தலைவர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள்” என்றார்.