காங்கிரஸ் அலுவலகத்தில் வைக்கப்படும் மன்மோகன் சிங் உடல்!
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல், மக்கள் அஞ்சலிக்காக சனிக்கிழமை வைக்கப்படவுள்ளது.
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
தற்போது தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க : மன்மோகன் சிங் மறைவு: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!
வெளிநாட்டில் உள்ள மன்மோகன் சிங்கின் மகள், தில்லிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாகவும், அவரிடம் ஆலோசித்த பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரின் உடல் வைப்பது முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை மன்மோகன் சிங் உடல் வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தில்லி ராஜ பாதை அருகே முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் மன்மோகன் சிங் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அனைவரும் மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.