பாலியல் கொடுமை முயற்சி தோல்வி; சிறுமிகளை தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை - சமையல்காரர் கைது!
புனேயில் மைனர் சிறுமிகள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். புனே ராஜ் குரு நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வந்தவர் அஜய்தாஸ் (54). அதே கட்டடத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 8 மற்றும் 9 வயது சிறுமிகள் தங்களது வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்தனர்.
உணவகம் ஒன்றில் சமையல்காரராக இருக்கும் அஜய்தாஸ் பல ஆண்டுகளாக அக்கட்டடத்தில் வசித்து வந்ததால் அச்சிறுமிகளுடன் நல்ல அறிமுகம் இருந்தது. வீட்டிற்கு வெளியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டார்கள். வெளியில் வேலைக்குச் சென்று இருந்த அவர்களது பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது இரண்டு பேரையும் காணாது பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.
இதையடுத்து இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். வழக்கமான சோதனை அடிப்படையில் அஜய்தாஸ் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தபோது, அங்கு இருந்த தண்ணீர் டிரம்மில் இரண்டு சிறுமிகளும் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டு இருந்தனர். டிரம் மீது துணியால் மூடப்பட்டு இருந்தது. அஜய்தாஸ் வீட்டில் இல்லை. இதையடுத்து அவர்தான் இக்கொலையை செய்திருக்கவேண்டும் என்று கருதி அவரை தேடி வந்தனர்.
அஜய் தாஸ் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அவரை மடக்கி பிடித்து போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது இரண்டு பேரையும் கொலை செய்ததை அஜய்தாஸ் ஒப்புக்கொண்டார். இது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டண்ட் ரமேஷ் கூறுகையில், ''அஜய்தாஸ் தனது சொந்த ஊரான மேற்கு வங்கத்திற்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்தான். விசாரணையில் இரண்டு சிறுமிகளையும் தண்ணீர் டிரம்மில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டான்
அதில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதையும் அஜய்தாஸ் ஒப்புக்கொண்டுள்ளான். அஜய்தாஸ் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுமிகளையும் லட்டு தருவதாக கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார். அவர்கள் உள்ளே வந்ததும், 9 வயது சிறுமியை பாத்ரூம் அறைக்குள் தள்ளி கதவை பூட்டியுள்ளான். அதனை பார்த்த 8 வயது சத்தம்போட்டுள்ளார். அதோடு உதவி கேட்டு கத்த ஆரம்பித்துள்ளார். உடனே வீட்டில் கிடந்த பைப் ஒன்றை எடுத்து சிறுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
அதன் பிறகு அங்கிருந்த தண்ணீர் டிரம்மிற்குள் சிறுமியை மூழ்கடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மற்றொரு சிறுமியை பாத்ரூமில் இருந்து வெளியில் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். ஆனால் அச்சிறுமியும் கத்தி கூச்சலிட்டதால் அச்சம் அடைந்த அஜய்தாஸ் இரண்டாவது சிறுமியையும் தண்ணீர் டிரம்மிற்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அதன் மீது துணியால் மூடிவிட்டு, கதவை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார் என்று விசாரணையில் தெரிவித்துள்ளார். அஜய்தாஸுடன் வேறு சில நண்பர்களும் தங்கி இருந்தனர். அவர்கள் சொந்த ஊருக்கு சென்று இருந்ததால் அஜய்தாஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்'' என்று தெரிவித்தார். அஜய்தாஸை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.