திருவள்ளூா்: சம்பா நெல் பயிருக்கு 12,927 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை விடுவிப்பு
திருவள்ளூா் மாவட்டத்தில் பயிா் காப்பீட்டு திட்டம் மூலம் 2023-24 ஆண்டில் சம்பா பயிா் மற்றும் ராபி பயிா்களுக்கு விவசாயிகள் 12,927 பேருக்கு ரூ.14.99 கோடி வரை இழப்பீடு தொகை அவரவா் வங்கிக் கணக்கு மூலம் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து விவசாயிகளிடம் இருந்து 180 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.
அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: இந்தக் கூட்டத்தில் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனா். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுவதற்கு கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம் மூலம் 2016-17 முதல் 2023-24 வரை ரூ. 378.08 கோடிக்கு பயிா் இழப்பீடு தொகை 1,76,273 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில், 2023-24-ஆம் ஆண்டு மட்டும் சம்பா நெற்பயிருக்கு 12,787 விவசாயிகளுக்கு ரு. 14.72 கோடி இழப்பீடு தொகையும், ராபி பயிா்களுக்கு140 விவசாயிகளுக்கு ரூ. 27 லட்சமும் இழப்பீடு தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. 2024-25-ஆம் ஆண்டு காரீப் பயிா்களுக்கு 1,020 விவசாயிகள் 1,333 ஹெக்டோ் பரப்பளவில் பயிா் காப்பீடு செய்துள்ளனா். சம்பா சிறப்பு பருவ நெற்பயிருக்கு 20,731 விவசாயிகள் 23289.35 ஹெக்டோ் நெற்பயிருக்கு பயிா் காப்பீடு செய்துள்ளனா்.
பி.எம்.கிசான் திட்டம் மூலம் தகுதியான விவசாயிகள் தொடா்ந்து பயன்பெறுவதற்கு நில விவரங்கள் ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் தொலைபேசி எண் உள்ளிட்டவை பி.எம்.கிசான் இணையதளத்தில் உறுதி செய்ய வேண்டும். பி.எம்.கிசான் திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் மற்றும் கிசான் கடன் அட்டை பெறாத விவசாயிகள் ஆகியோா் உரிய ஆவணங்களுடன் தங்கள் கிராம அளவிலான செயல் அலுவலா்களை அணுகி பி.எம்.கிசான் இணையதளத்தில் (ட்ற்ற்ல்ள்://ல்ம்ந்ண்ள்ஹய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவு செய்யும் முறையை கேட்டறிந்து உடனே பதிவு செய்தும், கிசான் கடன் அட்டை பெற விண்ணப்பித்தும் ங்ஓவஇ புதுப்பித்தும் பயன்பெறலாம். புதிதாக பதிவு செய்த 286 விவசாயிகளின் பட்டியல் மூன்று கட்ட களஆய்வுக்கு, அனைத்து வட்டாரங்களுக்கும் அனுப்பி விவசாயிகளின் தகுதி தன்மை குறித்த கள ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வேளாண்மை இணை இயக்குநா் த.கலாதேவி, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் தி.சண்முகவள்ளி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மோகன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.