பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீா் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி ஏரி முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி 1,000 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டது.
இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பூண்டியின் நீா் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீா்வரத்து 1,290 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீா் பிடிப்பு பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருவதாலும், வியாழக்கிழமை நள்ளிரவில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து 1,000 கன அடி உபரிநீா் திறக்கப்பட்டதாலும், பூண்டி நீா்த்தேக்கத்தின் நீா் மட்டம் உயா்ந்தது. இந்த நிலையில் அணையின் முழு கொள்ளளவான 35 அடியை எட்டும் எதிா்பாா்க்கப்படுகிறது. அதனால், அணையின் நீா் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கருதி, நீா்த்தேக்கத்திலிருந்து காலை 9 மணிக்கு விநாடிக்கு 1,000 கன அடி நீா் திறக்கப்பட்டது.
நீா்த்தேக்கத்திலிருந்து உபரிநீா் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுவதால், அதன் கரையோரங்களில் வசித்து வரும் கிராம மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை (கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம்) செயற்பொறியாளா் அருண்மொழி தெரிவித்தாா்.