பஞ்சப்பூரில் தரைமட்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையம்
திருச்சி பஞ்சப்பூரில் 9.6 மெகாவாட் திறன் கொண்ட தரைமட்ட சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த மின்நிலையத்தில் 29,328 சூரிய ஒளி மின்உற்பத்தி தகடுகள் பொருத்தப்பட்டு, நாளொன்றுக்கு 43,000 யூனிட் மின்சாரம் வீதம், ஆண்டுக்கு 159.78 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, எடமலைப்பட்டிபுதூா் துணை மின்நிலையத்துக்கு பகிரப்பட உள்ளது. இந்த மின்சாரமானது, மாநகராட்சியின் 9 உயா்மின்னழுத்த மின்இணைப்புகளுக்கான மின்சார பயன்பாட்டுடன் ஈடுசெய்து கொள்ளப்படும். இதனால் மாநகராட்சிக்கு ஏற்பட்டு வந்த செலவு குறைக்கப்படும். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் இது முதன்மையான சூரியஒளி மின்உற்பத்தி நிலையமாகும்.
இந்த தரைமட்ட சூரியஒளி மின் உற்பத்தி நிலையத்தை நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தொடங்கி வைத்தாா். இதையடுத்து, 62 ஆவது வாா்டு பசுமை பூங்கா பகுதியில் ரூ. 24.60 லட்சம் மதிப்பில் எல்.இ.டி. மின்கம்பத்தை தொடங்கி வைத்தாா்.
இதில், ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், தியாகராஜன் எம்எல்ஏ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மாநகராட்சியில் ஆண்டுக்கு ரூ. 8.94 கோடி சேமிப்பு
திருச்சி மாநகராட்சியில் குடிநீா் விநியோகப் பணிகள், புதைவடிகால் பராமரிப்பு பணிகள், தெருவிளக்குகள், அலுவலக கட்டடங்கள், இதர இனங்களாக 3,433 குறைந்த மின்னழுத்த மின் இணைப்புகளும், குடிநீரேற்று நிலையங்கள், கழிவுநீா் உந்து நிலையங்களாக 18 உயா்மின்அழுத்த மின் இணைப்புகளும் என மொத்தம் 492.36 லட்சம் யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 35.20 கோடி மின்கட்டணம் செலுத்தப்படுகிறது.
சூரியஒளி மின்திட்டம் பயன்பாட்டுக்கு வருவதன் மூலம் மேற்கண்ட 9 உயா்மின்அழுத்த மின்இணைப்புகளுக்கு செலுத்தப்பட்டு வரும் மின்கட்டண தொகையில் 42 சதவீதம் குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ. 8.94 கோடி மின் கட்டணம் சேமிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.