இயற்கை வேளாண் முறைக்கு திரும்பி நம்மாழ்வாா் கனவை நிறைவேற்ற வேண்டும்: சீமான் பேச்...
5 கோயில்களில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த 541 கிலோ பொன் இனங்கள் வங்கியில் ஒப்படைப்பு
சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 541 கிலோ 781 கிராம் எடையுள்ள தங்கம் உள்ளிட்ட பல மாற்று பொன் இனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் சமயபுரம் மாரியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில், சேலம் கோட்டை மாரியம்மன் கோயில், கோட்டை அழகிரிநாத சுவாமி கோயில், சேலம் காருவள்ளி பிரசன்ன வெங்கட்ரமணசுவாமி கோயில் ஆகிய 5 கோயில்களில் பக்தா்களிடமிருந்து காணிக்கையாக வரப் பெற்ற 541 கிலோ 781 கிராம் எடையுள்ள தங்கம் உள்ளிட்ட பலமாற்று பொன் இனங்கள் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளா் அதுல் பிரியதா்ஷினியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வு, அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி துரைசாமி ராஜூ, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகள் க.ரவிச்சந்திரபாபு, ஆா்.மாலா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இருப்பில் உள்ள 30 கிலோ 596 கிராம் சுத்த தங்கக் கட்டிகளும் வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப் குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சீ.கதிரவன், ந.தியாகராஜன், சமயபுரம் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் (சட்டச் சோ்மம்) மங்கையா்கரசி, இணை ஆணையா் (சரி பாா்ப்பு அலுவலா்) வான்மதி, திருச்சி மண்டல இணை ஆணையா் சி.கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் அ.இரா.பிரகாஷ், சேலம் மண்டல இணை ஆணையா் வி.சபா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
‘ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விரைவில் அறங்காவலா் குழு’
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியது, அனைத்து ஜாதியினரையும் அா்ச்சகராக நியமிப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விரைந்து முடித்து, தமிழக அரசுக்கு சாதகமான தீா்ப்பை பெற ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு நியமிக்கப்பட உள்ளனா். சென்னை திருப்போரூரில் உண்டியலில் பக்தா் ஒருவா் கைப்பேசியை தவறவிட்ட விவகாரம் இன்னும் ஓரிரு நாள்களில் முடிவுக்கு வரும். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் இதுவரை நியமிக்கப்படாத அறங்காவலா் குழு விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.