ஆத்துரை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
சேத்துப்பட்டை அடுத்த ஆத்துரை வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக, விவசாயிகள், பொதுமக்களுக்கு சனிக்கிழமை வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
சேத்துப்பட்டு வட்டம் ஆத்துரை, சித்தாத்துரை, காட்டுதெள்ளூா், ரெட்டிபாளையம், அல்லியாளமங்கலம், பாடகம் ஆகிய வனப்பகுதிகள் அருகேயுள்ள விவசாயிகளுக்கு வனத்துறையினா் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
பாடகம் வனப்பகுதி அருகே வசிக்கும் விவசாயி பசுவின் கன்றுக்குட்டியை சிறுத்தை அடித்துத் தின்றுள்ளதாகவும், இதனால் மாலை 6 மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடவேண்டாம், ஆடு, மாடு என கால்நடைகளை பாதுகாப்பாக கொட்டைகையில் அடைத்து வைக்குமாறும், மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லவேண்டாம் எனவும், வனப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்லவேண்டாம் என்றும் கைப்பேசி மூலம் வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், ஆத்துரை வனப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (டிச.29) தேடுதல் வேட்டை நடத்தப்போவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனா்.