செய்திகள் :

BBTAMIL 8: DAY 83: ஜெப்ரி வெளியேற்றம்; கண்ணீர் விட்டு கலங்கிய அன்ஷிதா, சவுந்தர்யா

post image
ஜெப்ரி வெளியேற்றப்பட்டது, இதர போட்டியாளர்களுக்கு மட்டுமல்ல, கணிசமான பார்வையாளர்களுக்கு கூட சற்று அதிர்ச்சியாக இருந்திருக்கக்கூடும்.

கலைத்திறமை உள்ளவர்கள் எதற்காக இந்த ஷோவிற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்றால், அந்தத் திறமைகள் ஷோவிற்கு பலமாக அமையும்.  தனது திறமையை வைத்து பார்வையாளர்களை மகிழ்விப்பார்கள் என்பது பிரதான  காரணம்.  இன்னொரு பக்கம்,  இந்த மேடையின் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தை வைத்து திறமைசாலிகளுக்கு புதிய வாய்ப்புகள் திறக்கக்கூடும் என்பது அவர்களுக்கான கூடுதல் போனஸ். 

ஆனால் ஜெப்ரி போன்றவர்கள் தங்களிடமுள்ள திறமையை வெளிப்படுத்துவதில் போதுமான கவனத்தைச் செலுத்தாமல் வம்பு, புறணி, குழு மனப்பான்மை போன்றவற்றில் மாட்டிக் கொண்டு வெளியேறுவது துரதிர்ஷ்டமானது. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 83

புத்தாண்டு வந்தாலே ‘இந்த ஆண்டிலிருந்து இதைச் செய்வேன்’ என்கிற பாவனையான உறுதிமொழிகள் நம்மிடம் பெருகி விடும். அந்த உறுதியும் உற்சாகமும் இரண்டே நாட்களில் மறந்தும் விடும்.  மேடைக்கு வந்த விஜய் சேதுபதி ‘தேவையில்லாம பிளான் பண்ணாதீங்க. பிரஷரை எடுத்துப் போட்டுக்காதீங்க. எது முடியுமோ அதைப் பண்ணுங்க போதும். குறிப்பாக இளைய தலைமுறைக்கு இதைச் சொல்றேன்” என்கிற யதார்த்தமான குறிப்போடு இல்லத்திற்குள் சென்றார். 

BBTAMIL 8: DAY 83

“வீட்டில் இருந்து உறவினர்கள் வரும் போது போட்டியாளர்கள் எல்லோரும் குழந்தைகளாக மாறிட்டாங்க. என்னதான் வெளியில் சுத்தினாலும் நமக்கான கூடு, உறவுகள் இருக்குன்றது மகிழ்ச்சியான விஷயம். வாழ்க்கையின் அர்த்தமே வீடு, மனைவி, பிள்ளைகள்தான்’ என்று முதலில் பேசப் போகிற விஷயத்தின் தலைப்பையும் உணர்த்தி விட்டுச் சென்றார் விசே.  அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை நிகழ்வுகள். 


விஷாலும் அன்ஷிதாவும் ‘வாக்கிங்’ சமயத்தில் மிக அந்நியோன்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த வார இறுதியில் யார் வெளியே செல்வார்கள் என்பது தெரியாததால் ‘ஃபேர்வெல்’ பேச்சாக அது இருந்தது. அப்படியாக மட்டும் இல்லை. இந்த இருவருக்கும் இடையயான நட்பின் நெருக்கத்தை நாம் ஏற்கெனவ அறிவோம் என்றாலும் இந்தச் சமயத்தில் அது கூடுதலாக வெளிப்பட்டது. 

நட்பிற்கும் அடுத்தபடியான நெருக்கத்திற்கு அவர்கள் நகர்ந்து விட்டார்களோ என்கிற உடல்மொழியை இருவரிடமும் காண முடிந்தது. (ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட் சைடாக விஷால் கை காண்பிக்கிறாரோ?!)  பிறகு அன்ஷிதா அருணிடம் சென்று ஏதோ காதில் ரகசியம் பேச “டன். நிச்சயமா நான் கூட நிப்பேன்” என்று வாக்களித்தார். 

அருகில் இருக்கும் தலைவர்களை அறிவது அவசியம்

‘என்னமோ நடக்கிறது’ என்பது ‘குன்சாக’ என்பது புரிந்தாலும் பிக் பாஸ் வீட்டில் நடப்பதெல்லாம் அந்தந்த மனநிலையில் நிகழும் கற்பனையான சித்திரங்கள் மட்டுமே. வெளியில் வந்தால் முற்றிலும் மாறி விடக்கூடிய சாத்தியமே அதிகம். மூன்றாம் சீசனில் கவின் - லாஸ்லியா லவ் டிராக் அந்தச் சமயத்தில் என்னை மிகவும் கவர்ந்தது. அத்தனை உண்மையான காதல் உணர்வு அவர்களிடம் அப்போது தென்பட்டது. வெளியில் வந்ததும் அவர்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்வார்கள், செய்ய வேண்டும்  என்று கூட வெள்ளந்தியாக நம்பினேன். ஆனால் இன்றைய யதார்த்தம் என்பது வேறு. பிக் பாஸ் வீட்டின் அனுபவம் என்பது கனவு மாதிரி. விடிந்தால் கலைந்து விடும். 

விடுதலை பாகம் 2

வெளியிலிருக்கும் மக்கள் இன்னமும் பார்க்காத திரைப்படங்களைக் கூட பிக் பாஸ் வீட்டிற்குள் இனி எளிதில் பார்த்து விடலாம் போல. விடுதலை -2  திரைப்படம் ஒளிபரப்பாகும் என்கிற தகவலை அறிந்து மக்கள் குஷியானார்கள்.  “வழக்கமா போட்டியாளர்களைப் பற்றி நான்தான் விமர்சனம் செய்வேன். இந்த முறை அவங்க படத்தைப் பத்தி சொல்லப் போறாங்க. இதுவும் ஒரு பிரமோஷன்தான்’ என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்றார் விசே. 

படம் பார்த்த எஃபெக்ட் காரணமாக ‘தோழர்’ என்கிற வார்த்தை புதிதாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருந்தது. படத்தின் அடிப்படையான விஷயங்களை விட்டு விட்டு ‘வாத்தியார் பெருமாள் பிரபோஸ் பண்ண காட்சி நல்லாயிருந்தது” என்றார் தீபக். (சவுந்தர்யா பிரபோசலை விடவா நல்லாயிருந்தது?) “இடது சாரி அரசியலை மக்களிடம் கொண்டு சென்ற படம்’ என்று படத்தின் மையத்தை தொட்டுப் பேசினார் முத்து. 

BBTAMIL 8: DAY 83

‘மக்களுக்கு பிடிச்ச படத்தை எடுக்கறதை விடவும், மக்களுக்கு தேவையான படத்தைத் தருவதில் வெற்றிமாறன் சிறப்பாக இயங்கி வருகிறார்’ என்று பாராட்டினார் மஞ்சரி ‘நமக்காக போராடிய தலைவர்களைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டிய கடமை நம்ம கிட்ட இருக்கு. அவங்க நம்ம பக்கத்துலயே வாழ்ந்திருப்பாங்க. ஆனா நமக்கு தெரிஞ்சிருக்காது” என்றார் விசே. 

கூட்டை விட்டுப் பறந்தால்தான் வானத்தை அளக்க முடியும்

அடுத்ததாக உறவுகளின் வருகைத் திருவிழா பற்றிய பகுதிக்கு நகர்ந்தவர் “தீபக் தேம்பித் தேம்பி அழுதது ஆச்சரியமா இருந்தது” என்று ஆரம்பித்து வைத்தவுடன் “ஆமாம் சார்.. தூக்கத்துல எழுந்தவுடன் ஷாக்கிங்கா இருந்தது” என்ற தீபக்கிடம் “உங்க பையன் க்யூட்டா பேசினான்” என்றார் விசே. அதற்கான கிரெடிட் முழுவதையும் தனது மனைவிக்கு தீபக் தந்தது சிறப்பான விஷயம். “நானும் என் பொண்டாட்டி, பிள்ளைங்களை கூட்டிட்டு உள்ளே வந்துடலாம் போல இருந்தது’ என்று ஜாலியாகச் சொன்னார் விசே. 

“என்னை கல்நெஞ்சக்காரன்னு நெனச்சிட்டு இருந்தேன். ஆனா அம்மாவைப் பார்த்ததும் உறைஞ்சுட்டேன். என் அக்காவோட பசங்கன்னா எனக்கு உயிரு. அவ பேசறது எனக்கு மட்டும்தான் புரியும்” என்ற ரயானிடம் “எங்களுக்கும் புரிஞ்சது சார். அவ க்யூட்டா பேசினா” என்று நக்கலடித்தார் விசே.  “டெவிலா இருக்கப்ப பயந்தியா - இல்ல.. ஏன்னா நீ அம்மா” என்கிற க்யூட் மோமெண்ட்டை பரவசத்துடன் பகிர்ந்து கொண்டார் மஞ்சரி.  ஒரு குழந்தைக்கு அவளுடைய அம்மாதான் பேரழகி என்கிற மையக்கருத்து தொடர்பாக ஒரு கதை சொன்னார் விசே. 

BBTAMIL 8: DAY 83

‘இதுதான் நான் அப்படிங்கிற கூட்டுக்குள்ள இருக்காதீங்க. வெளியே வாங்க. நான் கூட இன்ட்ரோவெர்ட்டா இருந்தேன். அதைத் தாண்டாம இருந்தா இந்த இடத்திற்கு வந்திருக்கவே முடியாது’ என்று பவித்ராவிற்கு அட்வைஸ் செய்த விசே “எல்லோர் பேச்சையும் விட உங்க அம்மா பேசினது எனக்கு ரொம்ப டச்சிங்கா இருந்தது. இந்த வீட்டில் வேறு வாய்ப்பே இல்லை. பேசித்தான் ஆகணும். பேசுன்னு சொன்னாங்க. உங்க அம்மா பேச்சைக் கேளு. பெரிய ஆளா வரலாம்” என்று ஜெப்ரிக்கும் உபதேசம் செய்தார். 

பெற்றோர்கள் குழந்தையாக மாறிய தருணம்


“உங்க அப்பா பேசினது நல்லாயிருந்தது” என்று அருணிடம் பேச்சை ஆரம்பிக்க “கன்ஃபெஷன் ரூம்ல தனியா உக்கார வெச்சவுடன் என்னென்னமோ எண்ணங்கள் ஓடிச்சு. பார்த்தவுடன்தான் நிம்மதியா இருந்தது’ என்றார் அருண். “சமயத்துல ரொம்ப நல்லாப் பேசறீங்க. இது பார்க்க நல்லாயிருக்கு.  மத்தவங்களை டீஸ் பண்ற அருண் வேணாம்” என்று அட்வைஸித்தார் விசே.

“எனக்கு எங்க அம்மா வாய்ஸ்தான் எப்பவுமே எனர்ஜி. அந்தக் குரலைக் கேட்டவுடனே எனர்ஜி வந்துடுச்சு. அப்பா வரலையான்னு கேட்டேன். ‘தெய்வங்கள் எல்லாம்’ பாட்டைத்தான் காலர் டியூனா வெச்சிருக்கேன். அப்பாவைப் பார்த்தவுடன் ‘ஸாரிப்பா’ன்னுதான் முதல்ல வந்தது” என்று பரவசப்பட்ட விஷாலிடம் “உங்க பிரெண்டு நேஹா ரொம்ப மெச்சூர்டா பேசினாங்க” என்று பாராட்டினார் விசே.  

BBTAMIL 8: DAY 83

“உங்க அம்மா உள்ளே வர்றதுக்குள்ள உங்க முகத்துல கோடி எக்ஸ்பிரஷன்கள் வந்துச்சு. பார்க்க நல்லாயிருந்தது” என்று அன்ஷிதாவைப் பாராட்டினார் விசே. “பிக் பாஸ் வீட்டுக்குள்ள எங்க அம்மா வர்றதைப் பார்க்கறது என் கனவா இருந்துச்சு.” என்று மகிழ்ந்தார் அன்ஷிதா.  

அனைத்துப் போட்டியாளர்களுக்கும் கைத்தட்டல் கிடைத்தது என்றால் முத்து எழும் போது கூடுதலாக இருந்தது. “இந்தக் கைத்தட்டல் எங்க அம்மா, அப்பாவிற்கு” என்று முத்து சென்டிமென்ட்டாக சொல்ல “இல்ல. உங்களுக்குத்தான் கைத்தட்டினோம்” என்று அந்த சென்டிமென்டை ஜாலியாக உடைத்தார் விசே. “மத்தவங்க குடும்பத்தைப் பார்த்துதான் எனக்கு குடும்பமா வாழ ஆசை அதிகமாகியிருக்கு. அந்த அளவிற்கு பழகவே நேரமில்லாம ஓடிட்டு இருந்தோம்” என்ற முத்துவிடம் “ஒரு கட்டத்துல அம்மா குழந்தையா மாறிடுவாங்க. அதைப் பார்க்க முடிஞ்சது. ‘என் பிள்ள அறிவா பேசுதுன்னு’ அம்மா சொன்னது சிறப்பு” என்றார் விசே.  

பலருடைய இதயங்களை உடைத்தாரா சவுந்தர்யா?


“உங்க அப்பாவோட குரல் உங்க கிட்ட வந்திருக்கு” என்று சவுந்தர்யாவிடம் விசே சொல்ல “இல்லை சார்.. ‘உன் குரல் தனித்துவமானது. அதுதான் உன் அடையாளம். அதை மாத்திக்காத’ன்னு அப்பா அட்வைஸ் பண்ணார். அது உண்மையாயிடுச்சு. பெத்தவங்களைப் பெருமைப்படுத்தற முதல் அடியா பிக் பாஸ் வீட்டைப் பார்க்கறேன்” என்று சொன்ன சவுண்டு, கூடுதல் பெருமையாக “நான் பண்ண இன்னொரு விஷயத்துல பலர் ஹார்ட் உடைஞ்சிருக்கும்” என்று தற்பெருமையுடன் சொல்ல “இல்ல.. நாங்க அதை சீரியசாவே எடுத்துக்கலை” என்று காலை வாரினார் விசே. “காதல் என்கிற கூத்து அரங்கேறிட்டுதான் இருக்கும். தவிர்க்க முடியாத அம்சம்” என்று பிரபோசல் பகுதியை வர்ணித்தார்.

BBTAMIL 8: DAY 83

“நாங்க பார்த்தோம். நீங்க பார்க்க வேண்டாமா?” என்று உறவுத் திருவிழாவின் வீடியோவை வெளியிட போட்டியாளர்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தார்கள். சிறப்பாக எடிட் செய்யப்பட்ட வீடியோவாக அது இருந்தது. விஷால் தனது தந்தையைக் கட்டியணைத்து கலங்குவதை தூரத்தில் நின்று அவரது அம்மா பார்க்கும் ஷாட் நெகிழ்வூட்டுவதாக இருந்தது. 

பிரேக் முடிந்து திரும்பிய விசேவிடம் “நாங்க பார்க்க அழகா இருந்தோம்” என்று பெருமிதமாக சொன்னார் முத்து. முரண்பாடுகள் தலைப்பை கையில் எடுத்து விசே. “சொல்லப்படாத விஷயங்களை சொல்லுங்கள்” என்று ஆரம்பிக்க “விஷாலுக்கும் எனக்கும்தான் கருத்து வேறுபாடு நிறைய இருக்கும். அது பத்தி சொல்லுவாங்கன்னு நெனச்சேன். ஆனா ஜெப்  பத்தி சொன்னது ஆச்சரியமா இருந்தது. சவுண்டு பத்தி சொல்லுவாங்கன்னு கூட நெனச்சேன்” என்ற ஜாக்குலினை தனது பிரத்யேக ரியாக்ஷனோடு பார்த்தார் சவுந்தர்யா. 

BBTAMIL 8: DAY 83

“நான் - சவுந்தர்யா - ஜாக்குலின். இந்த கேங் ஒண்ணா இருக்கறதைப் பத்தி சொல்லுவாங்கன்னு நெனச்சோம். ஆனா முத்து மஞ்சரி பத்திதான் சொன்னாங்க” என்றார் ரயான். “பூராப் பய மேலயும் டவுட்டு இருந்தது சார். நிச்சயம் புறணி பேசியிருப்பாங்க” என்று சபையை சிரிக்க வைத்தார் முத்து. “என் மனைவி ஜாக்கை நம்பகத்தன்மையான ஆள்ன்னு சொன்னாங்க. என்னால நம்பவே முடியலை” என்றதும் ஜாக் ஜெர்க் ஆனார். 

சவுந்தர்யாவின் சமையல் புத்தகம்  - இந்த வாரப் புத்தகப் பரிந்துரை

“இருக்கறதுலயே டாப் சவுந்தர்யா அப்பாதான். பொண்ணு மேலதான் முரண்பாடுன்னு சொன்னார். ராணவ் தன்னை இன்ட்ரோவெர்ட்ன்னு சொல்லிக்கிட்டான். ஆனா அவன் தம்பியோ வீட்லயும் இப்படித்தான் இம்சை தருவான்னு சொன்னான். பயபுள்ள பொய் சொல்லியிருக்கு” என்றார் முத்து. 

அடுத்ததாக சவுந்தர்யாவிடம் “நீங்க போய் ஸ்டோர் ரூம்ல இருங்க” என்று விசே சஸ்பென்ஸ் வைக்க முயல “நான் நாமினேஷன்ல இல்லை” என்று அந்த முயற்சியை உடைத்து விட்டுச் சென்றார் சவுண்டு.  மூடி வைத்த ஒரு பொருளை எடுத்து வந்தார் சவுண்டு. திறந்து பார்த்தால் ‘சவுந்தர்யாவின் சம்பவச் சமையல் குறிப்புகள்’ என்று அட்டையை வடிவமைத்து உள்ளே காலியான பக்கங்களை வைத்து ரகளையாக கிண்டலடித்திருந்தார் பிக் பாஸ். (அவரும் குழம்பை டேஸ்ட் பார்த்திருப்பாரோ?!) 

BBTAMIL 8: DAY 83

“பெண்களுக்கு சமைக்கத் தெரியணும்ன்ற டெம்ப்ளேட் விஷயத்தை சொல்ல வர்றது என் நோக்கமில்லை. ஆனா இத்தனை நாள் இந்த வீட்ல இருந்திருக்கீங்க. தெரியாத விஷயத்தை தெரிஞ்சிருக்கலாம் இல்லையா?” என்று விசே “அதை வெச்சு செஞ்சதுதான் அந்தக் குழம்பு” என்று கவுன்ட்டர் கொடுத்தார் சவுண்டு. “உங்க சமையலை 99 சதவீதம் சூப்பர்ன்னு பாராட்டிய ஒரு ஆள் பக்கத்துல இருக்கும் போது இப்படியொரு திமிர் வர்றது நியாயம்தான்” என்று பதிலுக்கு சவுண்டை கலாய்த்தார் விசே.

“அந்தப் புத்தகத்தை நீங்கதான் எழுதணும். பிக் பாஸ் அதை பப்ளிஷ் பண்ண  ரெடியா இருக்கார்” என்றவர், சவுந்தர்யாவின் அலட்டலைப் பார்த்ததும், “உங்க ஃபேமில எல்லோரையுமே பிடிச்சிருக்கு. உங்களைத் தவிர” என்று பங்கம் செய்தார் விசே. “உங்க ஆசிர்வாதத்துல இந்த புக்கை எழுதறேன்” என்று சவுந்தர்யா சொல்லவும் “பார்த்தீங்களா.. பதிலுக்கு கலாய்க்கறீங்க” என்று விசே சொன்னது ஜாலியான மோமெண்ட். 

BBTAMIL 8: DAY 83

பிரேக் முடிந்து திரும்பிய விசே, எந்த வித சஸ்பென்ஸூம் இல்லாமல் எவிக்ஷன் பகுதிக்கு வந்தார். “என்னது.. இப்பவே எவிக்ஷனா.. நாளைக்குத்தானே இருக்கும்?!” என்று மக்கள் அதிர்ச்சியடைய “இந்த செல்லத்தை எனக்கு ரொம்ப பிடிக்கும். இருந்தாலும் என்ன பண்றது?” என்ற விசே ‘ஜெப்ரி’ பெயர் போட்ட கார்டை எடுத்து நீட்ட மக்களுக்கு கூடுதல் அதிர்ச்சி. தீபக் தலையைக் கவிழ்ந்து கொள்ள அன்ஷிதாவும் சவுந்தர்யாவும் கண்ணீர் விட்டார்கள். 

ஜெப்ரியின் எவிக்ஷன் -  மன்னிப்பு கேட்ட ஜாக்

ஆனால் இந்த ஏமாற்றத்தை உடனே விழுங்கிக் கொண்ட ஜெப்ரி, ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ள முயற்சித்தார். “ஏன் இப்படி சோகமாயிட்டீங்க. இதுவொரு கேம். போய்த்தான் ஆகணும்” என்று அவர்களை இயல்பாக்க முயற்சிக்க “விஷால்தான் போவான்னு நெனச்சேன்” என்று அந்தச் சமயத்திலும் சிரிப்பூட்டினார் சவுந்தர்யா. “நான் யாரையும் உபயோகப்படுத்தறதுக்காக பழக மாட்டேன்” என்று ஜாக்குலினிடம் ஜெப்ரி தெளிவுப்படுத்த ‘ஸாரிடா” என்றார் ஜாக். “அடுத்ததாக ஆல்பம் ரிலிஸூக்கு இந்த வீட்டுக்கு வரணும்” என்கிற பாசிட்டிவ்வான நோட்டோடு வழியனுப்பினார் பிக் பாஸ். 

BBTAMIL 8: DAY 83

“ஜெப்ரி போறது எனக்கும் வருத்தமா இருக்கு. அதே சமயத்துல இத்தனை நாள் இருந்ததுல மகிழ்ச்சியும் இருக்கு” என்று மேடையில் சொன்ன விசே, ஜெப்ரியை வரவேற்று “பாட்டு பாடுங்க ஜெப்ரி” என்று கேட்டுக் கொண்டார். “எங்க அம்மா என்னை வெளியவே அனுப்ப மாட்டாங்க. இரண்டு வாரம்தான் இங்க இருப்பேன்னு நெனச்சேன். எண்பது நாட்கள் இருந்தது எனக்கே ஆச்சரியம்தான்” என்ற ஜெப்ரியிடம் “மறுபடியும் சொல்றேன். உங்க அம்மா பேச்சைக் கேளுங்க. நல்லா வருவீங்க” என்றார் விசே. 

வீட்டுக்குள் நுழைந்து போட்டியாளர்களிடம் பேச ஆரம்பித்த ஜெப்ரி, விசே பாணியில் ‘உக்காருங்க” என்றார். (அந்த மேடையின் காற்று அடித்து விட்டது போல!) “ஏன் மூஞ்சை சோகமா வெச்சுட்டு இருக்கீங்க” என்ற ஜெப்ரியிடம் “ஏண்டா. உன்னை மிஸ் பண்றாங்க. பின்னே எப்படி இருப்பாங்க” என்று வாரினார் விசே. “நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன். அடுத்தது நான்தான். கூட வந்துடுவேன்” என்றார் அன்ஷிதா. அது அடுத்த எபிசோடிலேயே நிகழ்ந்து விடும் என்று எதிர்பார்த்தாரோ?!

“உன்னோட வெற்றி உன்னுடையது மட்டுமல்ல’

“இங்க வந்தவங்க எல்லோருமே தன் பிள்ளை வெற்றியடையணும்னு நெனச்சிருப்பாங்க. ஆனா எல்லோருமே சேர்ந்து நெனச்சது ஜெப்ரியை. உன்னோட வெற்றி உன்னோடது மட்டுமில்ல. உன் பின்னாடி நிறைய பேர் வருவாங்க. பாதை திறந்து கிடக்கு. நிக்காம ஓடிட்டே இரு” என்று சுயமுன்னேற்றப் பிரசங்கத்தை நிகழ்த்தினார் முத்து. 

BBTAMIL 8: DAY 83

“எங்கே தப்பாச்சு?” என்று விசாரித்த விசே, ஜெப்ரி பாடும் திறமையை போதுமான அளவிற்கு வெளிக்காட்டாததை அவரின் வாயாலேயே உணர்த்தினார். “பயம்தான் உன் வேகத்தை ஸ்லோ ஆக்கிடுச்சு. நிறைய விமர்சனங்கள் நம்ம மேல வரும். அதை நாமா எடுத்து மேல பூசிக்கக்கூடாது. தனிப்பட்ட சாதனையா இல்லாம எல்லோருடைய சாதனையா பார்க்கணும். மத்தவங்க அனுதாபம் தேவையில்லை.” என்றெல்லாம் ஜெப்ரியிடம் தோழமையாகப் பேசிய விசே “என்ககு ஏதாவது அட்வைஸ் இருக்கா?” என்று குறும்பு செய்ய “அதெல்லாம் இல்லை சார்..” என்று நெளிந்த ஜெப்ரி “அடுத்த வாரம் டைட்டா வெச்சு செய்ங்க சார்” என்று சொல்ல அதற்கு வாய் விட்டு சிரித்தார் விசே. அத்துடன் ஜெப்ரியும் விசேவும் விடைபெற்றுக் கொண்டார்கள். 

ஜெப்ரியின் பிரிவிற்கு அன்ஷிதாவும் சவுந்தர்யாவும் கண்ணீர் விட்டு கலங்கினார்கள். தான் நாமினேட் செய்த சமயம் பார்த்து ஜெப்ரி போனதில் குற்றவுணர்ச்சி இருந்தாலும் ‘இது ஒரு கேம். அதுக்கு ஸாரி கேட்க மாட்டேன்’ என்று உணர்ச்சிப் பெருக்கின் இடையேயும் தெளிவாகப் பேசினார் சவுந்தர்யா. 

அடுத்த எபிசோடில் இன்னொரு எவிக்ஷன் காத்திருக்கிறது. போட்டியாளர்களின் எண்ணிக்கை குறைவது, சவாலான டாஸ்குகள் போன்றவற்றின் மூலம் வெற்றியாளர் யார் என்கிற அடையாளம் ஃபோகஸ் ஆகும். 

`பாதி நீயே என் பாதி நீயே!' - காதலை அறிவித்த விஜே சங்கீதா - அரவிந்த் சேஜூ!

`கனா காணும் காலங்கள்' வெப் சீரிஸில் மலர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சங்கீதா. சில தனிப்பட்ட காரணங்களால் அவர் அந்த சீரிஸில் இருந்து விலகினார். இரண்டாவது சீசனில் இருந்து வேறொருவர் மலர் கதாபாத்திரத்... மேலும் பார்க்க

BB Tamil 8: 'நான் யோசிச்சது எப்படி தப்பாகும்' - ஹவுஸ்மேட்ஸ் உடன் வாக்குவாதத்தில் முத்துகுமரன்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 86 வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும்... மேலும் பார்க்க

BB Tamil 8: `ராணவ் தப்பா பேசாதீங்க’ - டென்ஷனான முத்துக்குமரன் - சூடு பிடிக்கும் டிக்கெட் டு ஃபினாலே

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 86 வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும்... மேலும் பார்க்க

BB TAMIL 8 DAY 85: `நாமினேஷன் பிராசஸ் - எந்த மெத்தட் சரியானது?’ ராணவ்வை ஜெயிக்க வைத்த சவுந்தர்யா

“எனக்கு சந்தோஷம்பா” என்று பிக் பாஸே சொல்லுமளவிற்கு நாமினேஷன் சம்பவம் சிறப்பாக நடைபெற்றது. முத்து, சவுந்தர்யா தவிர மற்ற அனைவருமே இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறார்கள். ‘அனைவரையும் எவிக்ஷன் பிராசஸில் க... மேலும் பார்க்க

மறைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவின் தந்தை தற்கொலை - அதிர்ச்சி

மறைந்த சீரியல் நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் இன்று காலை திடீர் மரணமடைந்திருக்கிறார். வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.ஆங்கராக அறிமுகமாகி பிறகு ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முதலான... மேலும் பார்க்க

BB Tamil 8: 'நான் இந்த கேம்ல இருக்கணும்னா அருண் வெளிய போகணும்' - முத்துகுமரன் | டிக்கெட் டு ஃபினாலே

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 86 வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக்பாஸ் தமிழ் 8 கடந்த அக்டோபர் மாதம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் எவிக்ஷனில் ஜெப்ஃரியும், அன்... மேலும் பார்க்க